/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'உமாங்' செயலியில் புதுச்சேரி இணையுமா?
/
'உமாங்' செயலியில் புதுச்சேரி இணையுமா?
ADDED : ஜன 28, 2024 06:20 AM
மத்திய அரசுபுதிய தலைமுறை ஆட்சிக்கான ஒருங்கிணைந்த மொபைல் செயலியை உமாங் (UMANG) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி ஆண்டராய்டு, ஐ.ஓ.எஸ், விண்டோஸ் என, அனைத்து மொபைல் இயங்கு தளங்களிலும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு மாநிலமும் இணைந்து வருகின்றன. ஆனால் புதுச்சேரி இதுவரை உமாங் செயலியில் சேவைகளை இணைக்காமல் மவுனம் காத்து வருகிறது. புதுச்சேரியில் 54 அரசு துறைகள் இருந்தாலும், குடிமைப் பொருள் வழங்கல், போக்குவரத்து ஆகிய துறைகள் மட்டுமே இணைந்துள்ளன.
இந்த செயலி மூலமாக 205க்கும் அதிகமான துறைகளை இயக்கும் வசதிகளையும், 1,836 சேவைகளையும் மத்திய, மாநில அரசு வழங்கி வருகிறது. இதில் புதுச்சேரி இணையாமல் உள்ளது பின்னடைவாக உள்ளது.
உமாங் செயலி மூலமாக டிஜிலாக்கரில் இருக்கும் ஆதார் அட்டையை பார்க்கவும், டவுன்லோட் செய்யவும் இயலும். டிஜிலாக்கரில் வேறு ஏதேனும் சான்றிதழ்கள் இருந்தால் அவற்றையும் இதன் மூலமாக அணுகலாம். ஜி.எஸ்.டி., தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.
பிஎப் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும். பான்கார்டு தொடர்பான சேவைகளையும் பெறலாம். இதுதவிர பாஸ்போர்ட் சேவைகள், காஸ் சிலிண்டர் முன்பதிவு, பயிர்க் காப்பீடு, வருமானவரித் துறை போன்ற பல சேவைகளையும் பெற முடியும்.
உமாங் செயலியுடன் புதுச்சேரி மாநில சேவைகளை இணைக்காமல் விட்டால், தேசிய அளவில் நம் மாநிலம் பின்தங்க நேரிடும்.எனவே, உமாங் செயலியில் மாநில சேவைகள் அனைத்தையும் வழங்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

