/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அருங்காட்சியகம் இரண்டாக பிரிக்கும் விவகாரத்தில்... கவர்னர் தலையிடுவாரா?:4 ஆண்டுகளாக மத்திய அமைச்சகத்தில் கோப்பு துாங்குகிறது
/
புதுச்சேரி அருங்காட்சியகம் இரண்டாக பிரிக்கும் விவகாரத்தில்... கவர்னர் தலையிடுவாரா?:4 ஆண்டுகளாக மத்திய அமைச்சகத்தில் கோப்பு துாங்குகிறது
புதுச்சேரி அருங்காட்சியகம் இரண்டாக பிரிக்கும் விவகாரத்தில்... கவர்னர் தலையிடுவாரா?:4 ஆண்டுகளாக மத்திய அமைச்சகத்தில் கோப்பு துாங்குகிறது
புதுச்சேரி அருங்காட்சியகம் இரண்டாக பிரிக்கும் விவகாரத்தில்... கவர்னர் தலையிடுவாரா?:4 ஆண்டுகளாக மத்திய அமைச்சகத்தில் கோப்பு துாங்குகிறது
ADDED : ஜன 29, 2026 05:10 AM

புதுச்சேரி அருங்காட்சியகம் செயிண்ட் லுாயி வீதியில் கடந்த 1983ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் நுாற்றாண்டு பழமை உடையது. இது கீழ்தளம் மற்றும் மேல்தளம் என, இரு பகுதிகளை கொண்டுள்ளது.
கீழ்தளத்தில் சிற்ப அரங்கு, தொல்லியல் பிரிவு, செப்பு திருமேனி, போக்குவரத்து, நாணயம் என, முக்கிய பிரிவுகள் அமைந்துள்ளன. முதல் தளத்தில் பிரஞ்சியர் அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கு புதுச்சேரியை தவிர வேறு எங்கும் காண இயலாத ஒன்று. பிரஞ்சியர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் இவ்வரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் லிஸ்ட் முதலிடத்தில் உள்ள புதுச்சேரி அருங்காட்சியகத்தை இரண்டாக பிரித்து விசாலமான இடங்களில் வைக்க கலை பண்பாட்டு துறை முடிவு செய்தது. இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதிக்காக கடந்த 2022ம் ஆண்டு அணுகியது. ஆனால் இது நாள் வரை இதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
முதல் முறையாக 11 கோடிக்கு கோப்பு அனுப்பியபோது திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்க மத்திய கலாசார அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, கலை பண்பாட்டு துறை மறு திருத்தம்செய்து அனுப்பியது. ஆனால் அப்படி அனுப்பியும் கடந்த நான்கு ஆண்டுகளை கடந்தும் மத்திய கலாசார அமைச்சகம் இன்னும் ஒப்புதல் தராமல் இழுத்தடி வருவது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தைஏற்படுத்தியுள்ளது.
தொல்லியல் பொருட்கள் அருங்காட்சியகம் இரண்டாக பிரிக்கும்போது தொல்லியல் பிரிவு மட்டும் ரோமண்ட் ரோலண்ட் வீதியில் உள்ள கலை பண்பாட்டு துறை இயக்குனர் அலுவலக கட்டடத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டது. அங்கு தற்போது இயங்கி வரும் கலை பண்பாட்டு துறை இயக்குனர் அலுவலகம் கடற்கரை சாலையில் உள்ள புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இங்கு புதுச்சேரியின் தொல்லியல் பொக்கிஷங்களாக உள்ள அனைத்து பழங்கால பொருட்களும் இடம் பெற உள்ளது.
குறிப்பாக அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்ட பலவகையான உள்நாட்டு பானை ஓடுகள், அலங்கார ஓடுகள், யவன மதுசாடிகள், சங்கு வளையங்கள், தந்தங்களான மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள்,தொங்கல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. முத்திரையர்பாளையம், பிள்ளையார்குப்பம், பாகூரில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகள், பெருங்கற்கால ஈமப்பானைகளும் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரஞ்சிந்திய கலை படைப்புகள் இதேபோல் தற்போது செயிண்ட் லுாயி வீதியில் உள்ள புதுச்சேரி அருங்காட்சியக கட்டடத்தில், முழுவதும் பிரஞ்சிந்திய கலை பொருட்கள் இடம் பெற உள்ளது. குறிப்பாக 18-19ம் நுாற்றாண்டுகளில் புதுச்சேரியில் வாழ்ந்த மக்களின் பிரஞ்சு நாகரிகத்தை பிரதிபலிக்கும் கலை பொருட்கள் இடம் பெற உள்ளது. குறிப்பாக 1673 முதல் 1953ம் ஆண்டு வரை புதுச்சேரியில் வாழ்ந்த பிரெஞ்சு இல்லங்களை அலங்கரித்த கலை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்பட உள்ளது. பிரஞ்சு கவர்னர் துய்ப்ளே பயன்படுத்திய நாற்காலி, அவர் பயன்படுத்திய கட்டில் போன்றவையும் இடம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் போதிய இடவசதி இல்லாமல் முடங்கி கிடக்கும் அருங்காட்சியக கலை பொருட்களுக்கு விமோசனத்துடன், விசாலமான இடவசதியும் கிடைக்கும். ஆனால் மத்திய கலாசார அமைச்சகம் கோப்பினை வாங்கி வைத்துகொண்டு, சும்மாவே இருக்கிறது. இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தேவையில்லை. பெரிய தொகையும் செலவில்லை. 20 கோடியில் செயல்படுத்தி விடலாம். மனம் இருந்தால்,மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை இன்ஜின் ஆட்சி ஓடிக்கொண்டு இருக்கும்போது ஒரு மொபைல் போன் அழைப்பில் இதற்கு ஒப்புதல் பெற்றுவிட முடியும்.
மண்ணின் பெருமை பறைசாற்றும் அருங்காட்சியக விவகாரத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக தலையிட்டு ஒப்புதல் பெற வேண்டும்.

