/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் ஒளிருமா?இருளில் வாக்கிங் செல்லும் மக்கள் அச்சம்
/
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் ஒளிருமா?இருளில் வாக்கிங் செல்லும் மக்கள் அச்சம்
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் ஒளிருமா?இருளில் வாக்கிங் செல்லும் மக்கள் அச்சம்
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் ஒளிருமா?இருளில் வாக்கிங் செல்லும் மக்கள் அச்சம்
UPDATED : ஜன 05, 2026 06:57 AM
ADDED : ஜன 05, 2026 04:27 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்கு மின்கம்பங்களுக்கு போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்க கவர்னர், முதல்வர், மின் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் காலை, மாலையில் ஆயிரக்கணக்கானோர் 'வாக்கிங்' செல்கின்றனர். இவர்களுக்கு, வசதியாக மைதானத்தில் 100 இடங்களில் தெருவிளக்குகள் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இதுவரை 74 இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஏர்போர்ட் நுழைவு வாயில் முதல் என்.சி.சி., வளாகம் வரையில் உள்ள 17 தெரு விளக்குகளுக்கு இணைப்பு கொடுத்து ஜொலிக்கின்றன. ஆனால், ெஹலிபேடு மைதானத்தில் மற்ற இடங்களில் பணிகள் முடிந்து மின்கம்பங்கள் விளக்குகளுடன் சும்மா தான் நிற்கின்றன. மின் இணைப்பு கொடுக்காததால் மைதானத்தின் பெரும்பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
குறிப்பாக மைதானத்தின் நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ள தெற்கு பக்கத்தில் 30 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு கம்பத்திற்கு இரண்டு லைட் என, மொத்தம் 60 விளக்குகள் உள்ளன. இதேபோல் மோதிலால் நேரு பாலிக்டெக்னிக் முதல் தாகூர் கல்லுாரி வரையில் 17 மின்கம்பங்கள் ஒருபக்க விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கும் மின் இணைப்பு இல்லை.
மேலும், வெள்ளவாரி வாய்க்கால் ஏர்போர்ட் நுழைவு வாயில் முதல் லட்சுமி நகர் பாலமுருகர் கோவில் வரை 10 மின் கம்பங்கள் இருபக்க லைட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவையும் ஒளிராமல் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
ஒட்டுமொத்த மின்கம்பங்களுக்கும் ஒரு வாரத்திற்குள் மின் இணைப்பு கொடுத்து ஒளிரவிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மின் இணைப்பு கொடுக்காமல் இருளில் தான் மூழ்கி கிடக்கின்றன.
சூரியன் மறைந்தவுடன், இருண்டு கிடக்கும் சாலைகள் மரண பயத்தையும், அச்சத்தையும் 'வாக்கிங்' செல்வோரிடையே ஏற்படுகிறது. மங்கலான இருளில் நடக்கும்போது, பள்ளம் இருக்கிறதா… நாய் திடீரென ஓடுமா… யாராவது பின்னால் வருகிறார்களா… என்ற அச்சத்துடனே இருள் சூழ்ந்த சாலைகளில் மக்கள் 'வாக்கிங்' செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வரவுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால், அவ்வளவு தான். எந்த வளர்ச்சி பணியும் நடக்காது. ெஹலிபேடு மைதானம் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்கள். அப்படியே நடையாய் நடந்து மின் இணைப்பு கேட்டாலும் கூட, ஏதேனும் தேர்தல் விதிகளை காரணம் என, சொல்லி மின் இணைப்பை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி விடுவர். இதனால் ஏற்கனவே செலவழிக்கப்பட்ட அரசு பணமும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடும்.
இந்த தெரு விளக்குகளுக்கு மற்ற மின் இணைப்புகளுடன் இணைத்து கொடுத்தால் லோடு தாங்காது.
எனவே தனி மின் இணைப்பு கொடுத்து ஒளிர விட மின்துறையிடம் அணுகப்பட்டது. ஆனால் வழக்கம்போல் மின்துறை புதிய மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே முடிந்த பணிக்கு மின் இணைப்பு கொடுப்பது மட்டும் தான் பாக்கி உள்ளது. அரசு உத்தரவிட்டால் சில மணி நேரங்களில் இந்த பணியை முடித்துவிட முடியும். அரசு மனது வைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை.
மின் இணைப்பு வந்தால் ெஹலிபேடு மைதானம் ஒளிரும். மைதானம் ஒளிர்ந்தால் மக்கள் நிம்மதியாக 'வாக்கிங்' செல்வார்கள். அந்த நிம்மதியை தருவது தான் உண்மையான மக்கள் நல அரசின் அடையாளம். எனவே, ெஹலிபேடு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்கு மின்கம்பங்களுக்கு போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்க கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

