/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, காரைக்கால் நகர எரிவாயு திட்டம் வேகமெடுக்குமா?: அரசு துறைகள் இடையே ஒத்துழைப்பு இல்லை
/
புதுச்சேரி, காரைக்கால் நகர எரிவாயு திட்டம் வேகமெடுக்குமா?: அரசு துறைகள் இடையே ஒத்துழைப்பு இல்லை
புதுச்சேரி, காரைக்கால் நகர எரிவாயு திட்டம் வேகமெடுக்குமா?: அரசு துறைகள் இடையே ஒத்துழைப்பு இல்லை
புதுச்சேரி, காரைக்கால் நகர எரிவாயு திட்டம் வேகமெடுக்குமா?: அரசு துறைகள் இடையே ஒத்துழைப்பு இல்லை
ADDED : ஏப் 24, 2025 05:17 AM

புதுச்சேரி: நகர எரிவாயு திட்டத்திற்காக வாட் வரி குறைத்துள்ள போதிலும், இத்திட்டம் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இத்திட்டத்தை தனி கவனம் செலுத்தி அரசு வேகப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனம் பகுதியில் நகர எரிவாயு திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வீட்டு உபயோகத்துக்காக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு மீதான வாட் வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான இயற்கை எரிவாயு மீதான வரி 14.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கு 14.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையும் வரி குறைக்கப்பட்டுள்து. இது கடந்த ஏப். 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் நகர எரிவாயு திட்டத்தில் எதிர்பார்த்த வேகம் இல்லை. பள்ளம் தோண்டு வதிலேயே பல ஆண்டுகளை கழித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் முதல் முறையாக காரைக்காலில் குழாய் வழியாக 1 லட்சம் வீடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் கடந்த 2018ல் துவங்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு வீட்டிற்கு கூட இணைப்பு கொடுக்கவில்லை. அதே நேரத்தில், காரைக்காலுக்கு பிறகு துவங்கப்பட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கொடுத்து பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் புதுச்சேரியில் எரிவாயு திட்டத்திற்கு குழாய் கூட பதிக்க முடியவில்லை.
எரிவாயு குழாய் திட்டத்தை கையில் எடுத்துள்ள நிறுவனங்கள் பணிகளை வேகப்படுத்தி முடிக்க நினைத்தாலும் அரசு துறைகள் இடையே ஒத்துழைப்பு இல்லை. குறிப்பாக, காலத்தோடு தடையில்லாத சான்றிதழ் கிடைப்பதில்லை என நிறுவனங்கள் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளன.
பொதுப்பணித் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து என்.ஓ.சி., கேட்டு விண்ணப்பித்தும் சுலபத்தில் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே எரிவாயு திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை. வேறுவழியின்றி மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இத்திட்டத்தை துவக்கியுள்ள நிறுவனங்கள் கையை பிசைந்து வருகின்றன.
தொழில் துவங்க ஒற்றை சாளர முறையில் அனுமதிக்க வேண்டும் என, அரசு சொல்கிறது. அதுபோன்று புதுச்சேரி, காரைக்கால் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள நிறுவனங்களுக்கு அனைத்து துறைகளையும் ஒரே இடத்தில் கூட்டி உடனடியாக அனுமதி அளித்தால் இத்திட்டம் மீண்டும் வேகமெடுக்கும்.
தனி கவனம் தேவை:
புதுச்சேரியில் எந்த பெரிய திட்டங்களை துவங்கினாலும், ஆரம்பத்தில் நல்லாதான் இருக்கும்; பினிசிங் சரி இல்லையப்பா என்ற வடிவேலு காமெடியை சொல்லி கிண்டலடிக்கின்றனர். இதற்கு பல உதாரணங்கள் நம் கண்முன்னே நிற்கிறது. பல ஆண்டுகளாக கழிவு வாய்க்காலில் கரையை எட்டி பார்க்க முடியாமல் மூழ்கி கிடக்கும் உப்பனாறு மேம்பாலத்தை உதாரணமாக சொல்லலாம். நமது பக்கத்தில் உள்ள தமிழக மாவட்டங்களை ஒப்பிடும்போதும் நிர்வாக ரீதியாக நாம் சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. 3,703 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கடலுார் மாவட்டத்திலும், 3725.54 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரே ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தான் உள்ளனர். இவர்களே அனைத்து வேலைகளையும் செய்து விடுகின்றனர்.
ஆனால், வெறும் 479 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புதுச்சேரியில் இப்போது 19 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். ஆனால் இங்கு எந்த கோப்பும் நகருவதில்லை. மாநிலத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ள சூழ்நிலையில் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை தனியாக நியமித்து, இது போன்ற பெரிய திட்டங்களை சிறப்பு கவனம் செலுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும்.