/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா! உள்ளாட்சி தேர்தலைகாட்டி ஐகோர்ட்டில் புதிய வழக்கு
/
புதுச்சேரி சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா! உள்ளாட்சி தேர்தலைகாட்டி ஐகோர்ட்டில் புதிய வழக்கு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா! உள்ளாட்சி தேர்தலைகாட்டி ஐகோர்ட்டில் புதிய வழக்கு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா! உள்ளாட்சி தேர்தலைகாட்டி ஐகோர்ட்டில் புதிய வழக்கு
UPDATED : மார் 06, 2026 09:00 AM
ADDED : மார் 06, 2026 03:57 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் சட்டசபை தேர்தலை நடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்று அரசியல் கட்சியினர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வரை, புதுச்சேரி சட்டசபை தேர்தலை நடத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவரான முன்னாள் எம்.பி., ராமதாஸ் தாக்கல் செய்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆஜரான மூத்த வக்கீல் ஞானசம்பந்தம், புதுச்சேரியில் 14 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இட ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட்ட தனிநபர் கமிட்டியும் தனது அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வரை சட்டசபை தேர்தலை நடத்தக்கூடாது என்று வாதாடினார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இரண்டு வாரத்திற்குள் புதுச்சேரி அரசு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை தள்ளி வைத்தார். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ரவிக்குமார் ஆஜரானார்.
இரு முறை மட்டுமே...
புதுச்சேரியில் இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. கடந்த 1968ம் ஆண்டு முதல் முறையாக நடந்தது. அதையடுத்து 36 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. 2006 ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 2011ம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர். அதன் பிறகு 14 ஆண்டுகளாகியும் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதனால் புதுச்சேரிக்கு மத்திய அரசின் நிதி கிடைக்காமல் உள்ளது. தற்போதைய மக்கள் பிரதிநிதிகளும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இதை பெரிதாக கண்டுக் கொள்வதில்லை.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, கடந்த 2019ல் அரசு தேர்தல் நடத்த பணிகளைத் துவக்கியது. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோர்ட் தடை விதித்தது. அதன் பிறகு கோர்ட் உத்தரவின்படி தனிநபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அக்கமிட்டி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு விபரங்களை தொகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

