/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்துறையில் காலி பணியிடங்கள்... நிரப்பப்படுமா?:10 ஆண்டுகளாக நிர்வாக பிரிவு 'குறட்டை'
/
நலத்துறையில் காலி பணியிடங்கள்... நிரப்பப்படுமா?:10 ஆண்டுகளாக நிர்வாக பிரிவு 'குறட்டை'
நலத்துறையில் காலி பணியிடங்கள்... நிரப்பப்படுமா?:10 ஆண்டுகளாக நிர்வாக பிரிவு 'குறட்டை'
நலத்துறையில் காலி பணியிடங்கள்... நிரப்பப்படுமா?:10 ஆண்டுகளாக நிர்வாக பிரிவு 'குறட்டை'
ADDED : டிச 12, 2025 05:12 AM

புதுச்சேரி: நான்கு முக்கிய நலத் துறைகளில் அரசு பணியிடங்கள் 10 ஆண்டுகளாக காலியாக உள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஆதரவற்றோர் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இத்திட்டங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
ஏராளமான திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000 நிதியுதவி, ஆதரவற்ற விதவை பெண்ணின் மகள் திருமணத்திற்கு ரூ.30,000 நிதியுதவி, விதவை மறுமணம் செய்வோருக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.
முதல்வரின் பெண் குழந்தைகளுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ், ரூ.50,000 அளிக்கப்படுகிறது. இந்த உதவிகள் மட்டுமின்றி, சமூக பாதுகாப்பு பிரிவு வழியாகவும் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவை, முதிர் கன்னி, கணவரால் கைவிடப்பட்டவர் ஆகியோருக்கான உதவித்தொகை திருநங்கைகள் நலத்திட்ட உதவிகள், ஈமச்சடங்கு உதவி, காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நிதியுதவி 21 முதல் 55 வயதுக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி என, அனைத்துமே முக்கியமானவை.
மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேச குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், மத்திய அரசு பங்களிப்புடன் நடக்கும் பல திட்டங்கள் வழியாகவும் எண்ணற்ற குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன.
10 ஆண்டுகளாக காலி பல நலத்திட்டங்கள் செயல்பட்டாலும், அவற்றை சரியான நேரத்தில் பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நலத்துறையினரிடம் இருக்கிறது. இதற்காக தேவையான நிர்வாக, புலத்துறை, கண்காணிப்பு அதிகாரிகள் மிக முக்கியம். ஆனால் வருத்தத்திற்குரிய வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறைகளில் உயர் பதவிகள் பெரும்பான்மையாக காலியாகவே உள்ளன.
நலத்திட்டம் ஸ்தம்பிப்பு நல அலுவலர் பதவிகளில் மொத்தம் 49 இடங்கள் உள்ளன. இதில் 41 இடங்கள் காலியாக உள்ளன. மகளிர் குழந்தைகள் மேம்பாடு துறையைத் தவிர, மற்ற மூன்று நலத்துறைகளிலும் அதே நிலை தான். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. மொத்தம் 23 உயர்நிலை அதிகாரி பதவிகள் முழுதும் காலியாக உள்ளன.
குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டு நியமனங்கள் கூட வழங்கப்படவில்லை. இதன் விளைவாக நலத்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் நேரத்தில் மக்களிடம் சென்றடையாமல் பாதிக்கப்படுகின்றன. நலத்துறையின் நடவடிக்கைகள் தடைபடுவதால், பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
யார் தான் பொறுப்பு
நலத் துறை என்பது சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர், மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட நான்கு துறைகளை குறிக்கும். இதில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப வேண்டிய பொறுப்பு சமூக நலத் துறையின் நிர்வாக பிரிவிடம் தான் உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக உயர் பதவிகள் நிரப்பப்படாமல், பதவி உயர்வு அளிக்கப்படாமல் மவுனம் காத்து வருவது ஏன் என்று தெரியவில்லை. பணியாளர் பற்றாக்குறை காரணமாக பல திட்டங்கள் சரிவர கண்காணிக்கப்படவில்லை. மக்களுக்காக உருவாக்கப்பட்ட நலத்திட்டங்களை மக்களிடம் நேரத்தோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நிர்வாகத்துறையிடம் உள்ளது. ஆனால் சமூக நலத் துறையின் நிர்வாகப்பிரிவு உறங்கிக் கொண்டிருக்கிறது என, மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
நியமனம் அவசியம்
சமூக நலத்துறை மட்டுமின்றி அதனுடைய சகோதர நலத் துறைகளில் காலியாக உள்ள முக்கிய பதவிகளை விரைந்து நிரப்ப வேண்டும்.
குறிப்பாக நல அதிகாரி, உதவி இயக்குனர், துணை இயக்குனர், கள அதிகாரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டியது அவசியம். இதுவே நலத்திட்டங்கள் பலனடைய வேண்டிய மக்களிடம் நேரத்திலும், குறைபாடில்லாமல் சென்றடைய உதவும். சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலனுக்காக உருவாக்கப்பட்ட முக்கியமான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பணியாளர் தட்டுப்பாடு மிகப்பெரிய தடையாக இருப்பது சரியில்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து காலியாக உள்ள உயர்பதவிகளை உடனடியாக நிரப்புவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வு. நலத்துறையின் செயல்திறனை உயர்த்தவும், பொதுமக்களுக்கு உரிய நலன்களை நேரம் தாழ்த்தாமல் வழங்கவும், கவர்னர், முதல்வர் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

