ADDED : ஆக 20, 2025 11:51 PM
புதுச்சேரி : புதுச்சேரி பெண்ணிடம் ரூ.3.15 லட்சம் நுாதன மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒதியஞ்சாலையை சேர்ந்த பெண் ஒருவர், முஸ்லிம் மேட்ரிமோனி கணக்கு துவங்கி, வரன் தேடியுள்ளார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம், முகமது மாலிக் என்ற அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ் ஆப் மூலம், அவரை தொடர்பு கொண்டு பேசினார். பின், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் முனைவர் பட்டம் முடித்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் குடியேறத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறி பழகியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 5ம் தேதி மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர் தற்போது டில்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும், அதிக அளவு யூரோக்களுடன் வந்ததால், வரி செலுத்தவில்லை எனக் கூறி, விமான நிலைய அதிகாரிகள் தன்னை கைது செய்து விட்டதாக கூறினார். அதில் இருந்து வெளிவர ரூ.3 லட்சம் அனுப்பும்படி கேட்டுள்ளார். இதைநம்பிய அப்பெண் ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், முத்திரையார்பாளையத்தை சேர்ந்த நபர் 98 ஆயிரம், ரெட்டியார்பாளையம் பெண் 7 ஆயிரம், சாரத்தை சேர்ந்தவர் 90 ஆயிரம், கோவிந்தசாலையை சேர்ந்தவர் 43 ஆயிரம், பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர் 7 ஆயிரம் என, 6 பேர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.