/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தன் மகளுக்கு போட்டியாக இருந்த சக மாணவரை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 'ஆயுள்'
/
தன் மகளுக்கு போட்டியாக இருந்த சக மாணவரை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 'ஆயுள்'
தன் மகளுக்கு போட்டியாக இருந்த சக மாணவரை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 'ஆயுள்'
தன் மகளுக்கு போட்டியாக இருந்த சக மாணவரை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 'ஆயுள்'
ADDED : அக் 24, 2025 03:53 AM

காரைக்கால்: மகளுக்கு போட்டியாக இருந்த சக மாணவனுக்கு, குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு, ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால், நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்; ரேஷன் கடை ஊழியர்.
இவரது மகன் பாலமணிகண்டன், 13; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். இவருக்கும், இவருடன் படிக்கும் சக மாணவியான கோவில்பத்து வேட்டைக்கார தெருவைச் சேர்ந்த ஜான்சன் - சகாயராணி விக்டோரியா தம்பதியின் மகளுக்கும் மதிப்பெண் எடுப்பதிலும், போட்டிகளில் பங்கேற்பதிலும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், 2022 செப்., 2ம் தேதி மாலை, பள்ளி ஆண்டு விழா ஒத்திகையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்ற பாலமணிகண்டன், தாய் மாலதியிடம், 'வாட்ச்மேனிடம் நீங்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்து விட்டேன்' என, கூறினார்.
அதற்கு மாலதி, 'நான் குளிர்பானம் கொடுக்கவில்லையே' எனக்கூறிய நிலையில், பாலமணிகண்டன் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனே அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆவேசமடைந்த மாணவனின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்திடம், 'குளிர்பானம் கொடுத்தது யார்?' என கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, 'சிசிடிவி' பதிவு ஆய்வு செய்யப்பட்டது. அதில், பாலமணிகண்டனுடன் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா, 45, குளிர்பான பாட்டிலை, வாட்ச்மேன் தேவதாசிடம் கொடுத்து, பாலமணிகண்டனிடம் கொடுத்தது தெரிய வந்தது.
காரைக்கால் போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து, சகாயராணி விக்டோரியாவை கைது செய்தனர். பள்ளி ஆண்டுவிழா நடன நிகழ்ச்சியில் பாலமணிகண்டன் பங்கேற்கக்கூடாது என்பதற்காக, குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து, உறவினர் கொடுத்ததாக கூறி, வாட்ச்மேனிடம் கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பாலமணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரேத பரிசோதனையில், குளிர் பானத்தில் எலி மருந்து கலந்து குடித்ததால் இறப்பு ஏற்பட்டதும், இதயம், நுரையீரல் மற்றும் குடல்கள் புண்ணாகி இருந்ததும் உறுதியானது.
தொடர்ந்து, காரைக்கால் போலீசார், கொலை வழக்கில் சகாயராணி விக்டோரியாவை சிறையில் அடைத்தனர். காரைக்கால் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சகாயராணி விக்டோரியாவுக்கு ஆயுள் தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார்.

