/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினரிடம் பெண்கள் மண்டியிட்டு அழுததால் பரபரப்பு
/
தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினரிடம் பெண்கள் மண்டியிட்டு அழுததால் பரபரப்பு
தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினரிடம் பெண்கள் மண்டியிட்டு அழுததால் பரபரப்பு
தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினரிடம் பெண்கள் மண்டியிட்டு அழுததால் பரபரப்பு
ADDED : ஆக 27, 2025 07:41 AM

பாகூர் : தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினர் இருளஞ்சந்தை இருளர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தபோது, பெண்கள் மண்டியிட்டுஅழுததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில், இருளஞ்சந்தை, டி.என்.பாளையம், வில்லியனுார் உட்பட பல பகுதிகளில் இருளர் இன பழங்குடின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டில் பின் தங்கிய நிலையில், அரசு நிலங்கள், நீர் நிலைகளுக்கு அருகில் பாதுகாப்பின்றி வசிக்கின்றனர்.
நில ஒதுக்கீடு மற்றும் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பூர்வீக பழங்குடி இருளர் நலசங்கம் சார்பில்,  தேசிய பழங்குடியின ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினர் ஜதோத்து உசைன் நேற்று புதுச்சேரிக்கு வந்து, இருளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அதுபோல், பாகூர் அடுத்த இருளஞ்சந்தை கிராமத்தில், இருளர் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது, இருளர் பழங்குடியின மக்கள், தாங்கள் பல ஆண்டுகளாக புயல், மழை, வெள்ளம் என பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் தான் இங்கு வசித்து வருகிறோம். எங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படவில்லை.
ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதால், எங்களது பிள்ளைகளுக்கு, கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்காமல் போவதாக முறையிட்டனர். அப்போது, பெண்கள் சிலர் திடீரென, மண்டியிட்டு அழுதனர். அதிர்ச்சியடைந்த குழுவினர், அவர்களை தடுத்து நிறுத்தி,விரைவில் நிரந்தர வீடுகள் கட்டித்தரவும், சாதி சான்றிதழ்கள் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்து சென்றனர்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் இளங்கோவன், பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், பூர்வீக பழங்குடி இருளர் நலசங்க பொதுச் செயலாளர் அரங்கநாதன், தலைவர் செல்வராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, இக்குழுவினர் டி.என்.பாளையம், கரிக்கலாம்பாக்கம் பகுதி இருளர் குடியிருப்புகளில் ஆய்வு செய்தனர்.

