/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆரில் தரமற்ற பயணவழி உணவகங்கள்; சுகாதாரமற்ற கழிவறைகளால் பெண்கள் அவதி
/
இ.சி.ஆரில் தரமற்ற பயணவழி உணவகங்கள்; சுகாதாரமற்ற கழிவறைகளால் பெண்கள் அவதி
இ.சி.ஆரில் தரமற்ற பயணவழி உணவகங்கள்; சுகாதாரமற்ற கழிவறைகளால் பெண்கள் அவதி
இ.சி.ஆரில் தரமற்ற பயணவழி உணவகங்கள்; சுகாதாரமற்ற கழிவறைகளால் பெண்கள் அவதி
ADDED : ஜூலை 02, 2025 06:44 AM
மரக்காணம் : சென்னைக்கு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தரமற்ற உணவங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தின் தென் கிழக்கு மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திண்டிவனம் (புறவழிச்சாலை) மற்றும் மரக்காணம் (இ.சி.ஆர்.,) வழி என இரு மார்க்கங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில், திண்டிவனம் வழியாக செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கத்தோடு நிறுத்தப்படுகிறது. இதனால் கிண்டி, திருவான்மியூர், அடையாறு, மெரினா, உயர் நீதிமன்றம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு பயண நேரம் அதிகரிப்பதால், பெரும்பாலும் இ.சி.ஆரில் செல்லும் அரசு பஸ்களை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.
புதுச்சேரி மார்க்கமாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் கடப்பாக்கம் மற்றும் கூவத்துாரிலும், சென்னையில் இருந்து வரும் அரசு பஸ்கள் மரக்காணத்தில் உள்ள பயண வழி உணவகத்திலும் (மோட்டல்) நிறுத்தப்படுகின்றன.
இந்த மோட்டல்களில் கழிவறை பெயருக்கு மட்டுமே உள்ளது. உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஆண்கள், மோட்டலை சுற்றியுள்ள திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, கழிவறைக்காக சாலையை கடக்கும் பயணிகள் விபத்தில் சிக்குவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. ஆண்கள் நிலை இப்படி என்றால், பெண்கள் வேறுவழியின்றி கழிவு நீரில் நீந்தியே கழிவறைக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்படி சென்றால், அங்கு பைப் இருக்கிறது. ஆனால், தண்ணீர் வராது. தண்ணீர் வந்தாலும் பக்கெட் இருக்காது. இதனால், பெண்கள் பயணத்தின் போது குடிப்பதற்காக எடுத்து செல்லும் தண்ணீர் பாட்டிலை கழிவறைக்கு கொண்டு சென்று பயன்படுத்தும் நிலை உள்ளது.
மேலும், இங்குள்ள கடைகளில் விற்கப்படும் பிஸ்கெட், குளிர்பானம், குடிநீர் பாட்டில், மற்றும் சிகரெட் வரை யாருமே கேள்விப்படாத பெயர்களை கொண்ட பொருட்களாகத்தான் இருக்கிறது. தரமற்ற இந்த உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் உணவு தயாரிக்கும் சமையல் கூடம், உணவு அருந்தும் இடம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது.
பஸ்களை நிறுத்தும் டிரைவர், கண்டக்டர்களிடம் கேட்டால், இந்த மோட்டல்களில் மட்டுமே பஸ்களை நிறுத்த வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், வேறுவழியின்றி நிறுத்துவதாக கூறுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இது போன்று தரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை மாதம் தோறும் திடீர் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், அதிகாரிகள் இந்த உணவகங்கள் பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை. உணவகத்தின் உரிமையாளர்களின் கவனிப்பிற்கு மயங்கி, ஆய்வு செய்தது போல் அரசுக்கு தகவல்களை கொடுத்து வருவது வேதனைக்குரிய செயலாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுகாதாரம் இல்லாமலும், பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாமல் இருந்த ஓட்டல்களை சென்னை உயர்நீதி மன்றம் மூட உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இனியாவது போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பயண வழி மோட்டல்களை திடீர் ஆய்வு செய்து, பயணிகளுக்கு தரமான உணவு பொருளும், சுகாதாரமான கழிவறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.