வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியம் வராததால் தொழிலாளர்கள் அலுவலகம் திடீர் முற்றுகை
வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியம் வராததால் தொழிலாளர்கள் அலுவலகம் திடீர் முற்றுகை
ADDED : செப் 09, 2026 06:23 PM

புதுச்சேரி: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மூலம் ஓய்வூதியம் வராதததை கண்டித்து, ஓய்வு பெற்ற ஊழியர்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி சுதோசி மில், பாரதி மில் நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம், கடந்த 3 மாதங்களாக வராமல் உள்ளது. இது தொடர்பாக, தொழிலாளர்கள் மண்டல அலுவலக அதிகாரிகளை முறையிட்டனர்.
அதிகாரிகள் சரியான பதிலை கூறாமல், ஊழியர்களிடம் சில காரணங்களை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே இயங்கி வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தை, முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம் தலைமையில், தொழிலாளர் சங்க தலைவர் குப்புசாமி முன்னிலையில், ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் முதலியார்பேட்டை போலீசார் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குள் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
ஒரு வாரத்திற்கு பிறகு ஓய்வூதியம் வரவில்லை எனில், சாலை மறியலில் ஈடுபடுவோம் என, தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்து, கலைந்து சென்றனர்.
