/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோக சிகிச்சை நோய்களை மெல்ல குணப்படுத்தும் அமைதியின் மருத்துவம்
/
யோக சிகிச்சை நோய்களை மெல்ல குணப்படுத்தும் அமைதியின் மருத்துவம்
யோக சிகிச்சை நோய்களை மெல்ல குணப்படுத்தும் அமைதியின் மருத்துவம்
யோக சிகிச்சை நோய்களை மெல்ல குணப்படுத்தும் அமைதியின் மருத்துவம்
ADDED : டிச 25, 2025 05:19 AM
இன்றைய அவசர உலகில் நாம் எல்லாவற்றுக்கும் மருந்து, மாத்திரைகளை கண்டமேனிக்கும் விழுங்கி கொண்டு இருக்கிறோம். மருந்திற்கு மாற்று உண்டா என்று கேள்வி எழுப்பினால், யோகா இருக்கிறது என்று பதிலை முன் வைக்கின்றனர் யோகா ஆசிரியர்கள்.
யோகா என்பது மருந்துகளின் மணம் அல்ல; மூச்சின் ஓசையே இங்கு மருந்து. அமைதியான அறையில், கண்களை மூடி அமரும்போது, உடலுக்குள் ஓர் இனிய மாற்றம் துவங்குகிறது. அதுவே யோகா. வெளிப்படையாகக் காட்சியளிக்காதபோதிலும், உள்ளார்ந்த சக்தியால் நோய்களை மெல்ல மெல்ல குணப்படுத்தும் அதிசய ஆற்றல் யோகாவிற்கு உண்டு.
யோக ஆசனங்களில் உடல் நெளியும் ஒவ்வொரு தருணத்திலும், ரத்த ஓட்டம் சீராகிறது. நரம்புகள் தளர்ந்து, தசைகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதன் விளைவாக முதுகுவலி, கழுத்துவலி, மூட்டுவலி போன்றவை மெதுவாகக் குறைகின்றன.
சூரிய நமஸ்காரம் போன்ற பயிற்சிகள் உடலின் உறக்கத்தில் இருந்த சக்தியை எழுப்பி, நோய்களுக்கு எதிரான வலிமையை உருவாக்குகின்றன.
பிராணாயாமம் நோய்களுக்கு எதிரான யோகாவின் மறைமுக ஆயுதம். ஆழ்ந்த மூச்சின் பயணம் நுரையீரலை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை உயர்த்துகிறது.
இதனால் சுவாசக் கோளாறுகள் குறைய, இதயத் துடிப்பு சீராக, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மூச்சை கட்டுப்படுத்த கற்றுக் கொள்வதன் மூலம், உடல் மட்டுமல்ல நோய்களுக்கு அடித்தளமாக இருக்கும் மன அழுத்தமும் சிதறடிக்கப்படுகிறது.
தியானம் நோய்களின் வேரைத் தொடும் யோகத்தின் உச்சம். மனத்தில் தேங்கிய கவலை, பயம், கோபம் ஆகியவை நோய்களாக உடலில் வெளிப்படும் போது, தியானம் அவற்றை கரையச் செய்கிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், துாக்கமின்மை போன்ற வாழ்க்கைமுறை நோய்கள், மன அமைதி கிடைக்கும்போது தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
யோகாவை தொடர்ச்சியாக, ஆசானின் வழிகாட்டுதலுடன் பயிற்சி செய்தால், நோய்கள் பின்னடையும். மருந்துகளுக்குத் துணையாக யோகா நிற்கும்போது, குணமடையும் பயணம் மென்மையாகவும் நிலைத்ததாகவும் மாறுகிறது.
நோய்களை வெல்ல வலிமையான ஆயுதம் தேவை என்றால், அது யோகாவே. உடலுக்கு சிகிச்சை, மனத்திற்கு அமைதி, வாழ்க்கைக்கு சமநிலை, இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் அளிக்கும் மவுன மருத்துவம் யோகா.
இருப்பினும் ஜதிகள், கிரியாக்கள், சூரிய நமஸ்காரம், ஆசனங்கள், முத்திரைகள், பிராணயாமாக்கள், உடல் தளர்வு உள்ளிட்ட யோகா சிகிச்சையின் அனைத்து நடைமுறைகளையும் அனுபவம் வாய்ந்த ஆசிரியரிடம் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும். வேறு வழிகளில் யோக நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், முயற்சிப்பது ஆபத்தானது.
யோகா பற்றிய விரிவாக ஆராய்ச்சி நவீன மருத்துவத்திற்கும் துணையாக யோக சிகிச்சையை பயன்படுத்துவதால் பல நோய்களை நல்ல முறையில் குணப்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது.
யோகாவும், நவீன மருத்துவமும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்வது மட்டும் இன்றி, முழுமையான ஆரோக்கியத்தை புரிந்து கொள்கின்றன. இவை வாழ்க்கையை மாற்றக்கூடிய உயிர்காக்கும் அறிவியல் ஆகும். மனித குலத்தின் நலனுக்காக இந்த இரண்டு அறிவியலின் ஆற்றத்தை பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். எனவே இனி ஒவ்வொரு வாரமும் யோக சிகிச்சை குறித்த சிறப்பு தொடரை விளையாட்டு பகுதியில் காண்போம்.

