இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ரூ. 1.63 லட்சம் இழந்த வாலிபர்
இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ரூ. 1.63 லட்சம் இழந்த வாலிபர்
ADDED : ஆக 19, 2026 06:02 PM
பாகூர்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஸ்பா மசாஜ் விளம்பரத்தை நம்பி, ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை வாலிபர் ஒருவர் இழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர், புதுச்சேரியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாக வேலை செய்து வருகிறார். இவர், மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் பார்த்து உள்ளார். அதில் வந்த ஒரு மசாஜ் விளம்பரத்தை பார்த்து, அதனை கிளிக் செய்தார். அது வேறொரு டெலிகிராம் பக்கத்திற்கு சென்றுள்ளது.
அதில், ஸ்பா மசாஜ் செய்தவற்கு, 299 ரூபாய் முன் பணமாக செலுத்த வேண்டும் என, கூறியுள்ளனர். அவர்கள் அனுப்பிய கியூஆர் கோடிற்கு தனது ஜிபே மூலம் பணத்தை செலுத்தி பதிவு செய்துள்ளார்.
பின், செக்கியூரிட்டி டிபாசிட், ஐ.டி. வெரிப்பிக்கேஷன் என்ற பெயரில் பல்வேறு தவணைகளாக மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 299 ரூபாயை அந்த வாலிபர் தனது ஜிபே மற்றும் தனது நண்பர்களின் ஜிபே மூலமாக செலுத்தி உள்ளார்.
மேலும், மர்ம நபர் பணம் கேட்டு வந்த நிலையில், அந்த வாலிபர் இதற்கு மேல் தன்னிடம் பணம் இல்லை. தான் அனுப்பிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதன்பின், அந்த மர்ம நபரின் மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, அவர், புதுச்சேரி சைபர் போலீசில் புகார் தெரிவித்தார். அவர்கள் புகாரை பாகூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பினர். இது குறித்து பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
