/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பணிக்கான போட்டி தேர்வு தயாராகும் இளைஞர்கள்
/
அரசு பணிக்கான போட்டி தேர்வு தயாராகும் இளைஞர்கள்
ADDED : மே 31, 2025 11:44 PM

புதுச்சேரி அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கு ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் ஏராளமான இளைஞர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். புதுச்சேரி அரசில் உதவி யாளர் பணியிடங்கள் - 256, துணை தாசில்தார் - 30, வி.ஏ.ஓ., - 41 உட்பட மொத்தம் 317 பணியிடங்களுக்காக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக புதுச்சேரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் தீவிரமாக படித்து வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இது போன்ற தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு உதவிடும் வகையில் புதுச்சேரி ரோமன் ரோலாண்ட் நுாலகத்தில் வேலை வாய்ப்புக்கான (கேரியர் கைடன்ஸ்) நுால்கள் பல லட்சம் ரூபாயில் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதையொட்டி, ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நுாலகம் ரெபரன்ஸ் செக் ஷன், சிறுவர் பிரிவு அருகில் உள்ள அறைகள், நுாலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் அமர்ந்து தீவிரமாக படித்து வருகின்றனர்.
இதேபோல் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலக நுாலகம், காமராஜர் மணி மண்டபம் நுாலகத்திலும் படிக்கின்றனர். தனியார் (ஸ்டெடி ஹால்) படிப்பகங்களில் கட்டணம் செலுத்தி போட்டி போட்டு படிக்கின்றனர்.
இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் தனியார் கோச்சிங் சென்டர் பயிற்சி வகுப்புகளில் மட்டுமே பல ஆயிரக்கணக்கானோர் படிப்பதாக இளைஞர்கள் கூறுகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு அரசு தேர்வுகள் எழுத போட்டி பலமாக இருக்கும் என்பது நிதர்சனம்.