ADDED : அக் 22, 2026 03:54 AM
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், குமராட்சி அடுத்துள்ள மேலநெடும்பூரை சேர்ந்த துரைசாமி, 72; இவர், தன் தந்தை வேலுச்சாமி பெயரில் உள்ள சொத்தை மகன்கள் இருவர் உட்பட தனக்கும் சேர்த்து 3 பங்கு பிரிக்க வேண்டும் என சிதம்பரம் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில் தந்தை துரைசாமி, தனக்கு சொத்தில் பங்கு தராமல், தனது அண்ணன் வேல் முருகனுக்கு மட்டும் கிரையம் செய்து தர உள்ளதை அறிந்து, திருநாவுக்கரசு குமராட்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட சொத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தடை மனு கொடுத்துள்ளார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட சொத்தை, வேல்முருகன் பெயருக்கு பத்திரவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையறிந்த திரு நாவுக்கரசு, நேற்று மதியம் தனது மனைவி குழந்தையுடன் குமராட்சி பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று எனக்கும் பங்குள்ள சொத்தை எப்படி என் அண்ணனுக்கு மட்டும் பத்திரப் பதிவு செய்யலாம், இந்த சொத்து குறித்து நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது.
நானும் இங்கு தடை மனு கொடுத்துள்ளேன் என கூறி பிரச்னையில் ஈடுபட்டு, இதே இடத்தில் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.
பெண் சார்பதிவாளர், திருநாவுக்கரசிடம், பத்திர பதிவை நீக்குவதாக பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
