ADDED : அக் 27, 2025 10:24 PM

புதுடில்லி: இந்த ஆண்டுக்கான மீதமுள்ள பாட்மின்டன் போட்டிகளில் இருந்து இந்திய வீராங்கனை சிந்து விலகினார்.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து 30. ஐதராபாத்தை சேர்ந்த இவர், ஒலிம்பிக் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), உலக சாம்பியன்ஷிப் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப், இந்திய ஓபன், சீன மாஸ்டர்ஸ் தொடர்களில் காலிறுதி வரை சென்ற இவர், ஒரு சாம்பியன் பட்டம் கூட வெல்லவில்லை. கடைசியாக, கடந்த டிசம்பரில் நடந்த சையது மோடி சர்வதேச தொடரில் கோப்பை வென்றிருந்தார்.
காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிந்து, இந்த ஆண்டு நடக்கவுள்ள மீதமுள்ள பி.டபிள்யு.எப்., டூர் தொடர்களில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். விரைவில் குணமடையும் பட்சத்தில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் போட்டிக்கு திரும்பலாம்.
சிந்து கூறுகையில், ''காயம் முழுமையாக குணமடையாததால், நடப்பு சீசனில் இருந்து பாதியில் விலக நேரிட்டது. எனது பயிற்சியாளர்கள், மருத்துவ குழுவினருடன் ஆலோசித்து இம்முடிவை எடுத்துள்ளேன். காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான பயிற்சியை ஏற்கனவே துவக்கிவிட்டேன். முழு உடற்தகுதியுடன் புதிய சீசனில் களமிறங்குவேன்,'' என்றார்.

