பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-9' * உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில்
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-9' * உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில்
ADDED : ஆக 04, 2026 11:13 PM

புதுடில்லி: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்துவுக்கு 9வது இடம் தரப்பட்டுள்ளது.
இந்தியாவின் டில்லியில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் வரும் 17-23ல் நடக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பெற்ற உலகத் தரவரிசை அடிப்படையில் இத்தொடரில் பங்கேற்க, வீரர், வீராங்கனைகள் வாய்ப்பு பெறுவர்.
தற்போது, கடந்த ஜூலை 28ன் தரவரிசைப்படி, இத்தொடரில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதன்படி, ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் சிந்துவுக்கு (2016ல் வெள்ளி, 2021ல் வெண்கலம்), ஒற்றையர் பிரிவில் 9வது இடம் தரப்பட்டுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை சிந்து ஒரு தங்கம் (2019), 2 வெள்ளி (2017, 2018), 2 வெண்கலம் (2013, 2014) என 5 பதக்கம் வென்றுள்ளார். முதன் முறையாக சொந்த மண்ணில் களமிறங்க காத்திருக்கிறார்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென்னுக்கு, 14வது இடம் தரப்பட்டுள்ளது. ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 'நம்பர்-5', கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தனிஷா, கிராஸ்டோ ஜோடிக்கு 15வது இடம் தரப்பட்டன. இன்று போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட உள்ளது.
