இரண்டாவது சுற்றில் சிந்து: சீன பாட்மின்டனில் முன்னேற்றம்
இரண்டாவது சுற்றில் சிந்து: சீன பாட்மின்டனில் முன்னேற்றம்
ADDED : ஜூலை 22, 2026 10:02 PM

சாங்ஜோ: சீன ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.
சீனாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சீன ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, உன்னதி ஹூடா மோதினர். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 9-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட சிந்து 21-10 என தன்வசப்படுத்தினார்.
மொத்தம் 56 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 21-14, 9-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உலகின் 'நம்பர்-11' இந்தோனேஷியாவின் ஆல்வி பர்ஹான் மோதினர். உலக தரவரிசையில் 23வது இடத்தில் உள்ள ஆயுஷ் 21-17, 5-21, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிராஸ்டோ, ரோஹன் கபூர்-ருத்விகா ஷிவானி ஜோடி தோல்வியடைந்தன. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி தோல்வியடைந்தது.
