/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாரிசில் சாதிக்க சுஹாஸ் 'ரெடி'
/
பாரிசில் சாதிக்க சுஹாஸ் 'ரெடி'
ADDED : ஆக 24, 2024 11:07 PM

புதுடில்லி: கம்ப்யூட்டர் இன்ஜினியர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, மாவட்ட மாஜிஸ்திரேட், பாராலிம்பிக் சாம்பியன் என சகலகலா வல்லவனாக திகழ்கிறார் சுஹாஸ் யதிராஜ். மீண்டும் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் (ஆக. 28-செப். 8) நடக்க உள்ளது. இந்தியா சார்பில் 84 நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.
'நம்பர்-1' வீரர்: பாட்மின்டன் ஒற்றையர் (எஸ்எல்-4 பிரிவு), கலப்பு அணிகள் (எஸ்எல்3-எஸ்யு5) பிரிவில் சுஹாஸ் யதிராஜ் பங்கேற்கிறார். கடந்த டோக்கியோ பாராலிம்பிக் (2021) பாட்மின்டனில் வெள்ளி வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பெருமை பெற்றார். உலகின் 'நம்பர்-1' வீரராகவும் உயர்ந்தார்.
படிப்பில் கெட்டி: கர்நாடகாவை சேர்ந்தவர் சுஹாஸ் யதிராஜ், 41. கணுக்கால் குறைபாடுடன் பிறந்தார். படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆனார். முதல் வாய்ப்பிலேயே ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். 2007ல் உபி., 'கேடரில்' ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக சேர்ந்தார். பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக பணியாற்றினார். தற்போது உபி., அரசின் இளைஞர் நலன் துறையின் செயலர், இயக்குநராக உள்ளார். நிர்வாகப் பணிகளை போல விளையாட்டிலும் சுஹாஸ் அசத்துகிறார்.
சுஹாஸ் கூறுகையில்,''பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்காக சிறப்பான முறையில் தயாராகி உள்ளேன். கடந்த 6 மாதமாக தனிப்பட்ட வாழ்க்கையை விளையாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறேன். பாட்மின்டன் பயிற்சிக்காக போதிய நேரம் ஒதுக்கியுள்ளேன்.
வாழ்வின் லட்சியம்: படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் சாதிப்பது கடினம் என கூறுவது தவறு. நேர மேலாண்மை முக்கியம். இளம் பருவத்தில் இருந்து தினமும் இரண்டு மணி நேரம் விளையாடுகிறேன். படிப்பு, வேலை என எப்போதும் 'பிஸியாக' உள்ளேன். விரும்பி செய்தால், எத்தனை பணிகளிலும் வெற்றிக் கொடி நாட்டலாம்.
'பாரா' பாட்மின்டனில் இறங்கியதும், வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருப்பது புரிந்தது. நாட்டுக்காக விளையாடுவது பெரிய விஷயம். முழுமையாக முயற்சி செய்து, பாரிசில் பதக்கம் வெல்வேன்,''என்றார்.
பாரிஸ் சென்றார் அவனி
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அவனி, மோனா அகர்வால், மணிஷ் நார்வல் உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர் கொண்ட இந்திய அணியினர் பாரிஸ் சென்றனர்.
மணிஷ் நார்வல் கூறுகையில், ''பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். டோக்கியோவில் கிடைத்ததைவிட, இம்முறை துப்பாக்கி சுடுதலில் நிறைய பதக்கம் கிடைக்கும்,'' என்றார்.
இது வரலாறு
இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த வீரர்கள் சிலர், லண்டனின் வடமேற்கே 60 கி.மீ., துாரத்தில் இருக்கும் ஸ்டோக் மாண்டேவில் கிராமத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, 1948ல் டாக்டர் சர் லுட்விக் குட்மேன், 'வீல்சேரில்' விளையாட்டு போட்டிகளை நடத்தினார். இதில் 16 பேர் பங்கேற்றனர். இது பாராலிம்பிக் விளையாட்டை நடத்துவதற்கு அடித்தளமாக அமைந்தது. பின் 1952, 1954, 1955ல் 'ஸ்டோக் மாண்டேவில் விளையாட்டு' என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 1960ல் இத்தாலி தலைநகர் ரோமில் முதன்முறையாக பாராலிம்பிக் விளையாட்டு நடந்தது.
* பாரம்பரியமிக்க பாராலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, அதன் பிறப்பிடமான ஸ்டோக் மாண்டேவில் கிராமத்தில் 2012ல் முதன்முறையாக நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுக்காக நேற்று, பாராலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
கடலுக்கு அடியில் பயணம்
ஸ்டோக் மாண்டேவில் கிராமத்தில் இருந்து பாராலிம்பிக் சுடர், தனது பயணத்தை துவக்கியது. பிரிட்டன்-பிரான்ஸ் இடையே கடலுக்கு அடியில் 50 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் சுரங்கப்பாதை வழியாக, 24 பிரிட்டிஷ் வீரர்கள் பாராலிம்பிக் சுடரை கொண்டு வருவர். பின் இதை பிரான்ஸ் வீரர்கள் பெற்றுக் கொள்வர். பிரான்சின் கலேஸ் கடற்கரை வந்த பின், 50 முக்கிய நகரங்களுக்கு, 1000 பேர், 4 நாட்களுக்கு பாராலிம்பிக் சுடருடன் வலம் வருவர். துவக்க விழா அன்று பாராலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்.

