ADDED : ஏப் 27, 2024 10:46 PM

செங்டு: தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் முதல் போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன.
சீனாவில் 33வது தாமஸ் கோப்பை (ஆண்கள்), 30வது உபர் கோப்பை (பெண்கள்) தொடர் நடக்கிறது. 'இளம்' இந்திய பெண்கள் அணி தனது முதல் போட்டியில் கனடாவை சந்தித்தது. ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா (53வது இடம்), மிட்செல்லி லீயை(25வது இடம்) 26-24, 24-22 என வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
இஷா ராணி 21-13, 21-12 என வென் ஜங்கை சாய்க்க, அன்மோல் 21-15, 21-11 என எலியானாவை வென்றார். இரட்டையர் போட்டியில் பிரியா-ஸ்ருதி ஜோடி 21-12, 21-10 என கேத்தரின்-ஜெஸ்லின் ஜோடியை சாய்த்தது. சிம்ரன்-ரித்திகா ஜோடி 19-21, 15-21 என தோற்றது. முடிவில் இந்திய அணி 4-1 என கனடாவை வீழ்த்தி அசத்தியது.
ஆண்கள் கலக்கல்
இந்திய ஆண்கள் அணி, தாய்லாந்துடன் மோதியது. முதல் போட்டியில் பிரனாய், 20-22, 14-21 என விதித்சர்னிடம் வீழ்ந்தார். இரட்யைரில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி, 21-19, 19-21, 21-12 என தாய்லாந்து ஜோடியை வென்றது. மற்றொரு போட்டியில் லக்சயா சென் 21-12, 19-21, 21-16 என தீரரட்சகுலை வென்றார். இரட்டையர் போட்டியில் அர்ஜுன், துருவ் கபிலா ஜோடி 21-19, 21-15 என டனடன், வாசிராவித் ஜோடியை சாய்த்தது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

