/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
மீண்டும் தாமஸ் கோப்பை: பிரனாய் எதிர்பார்ப்பு
/
மீண்டும் தாமஸ் கோப்பை: பிரனாய் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 25, 2024 11:11 PM

புதுடில்லி: ''தாமஸ் கோப்பையில் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்வது கடினமானது,'' என, இந்திய வீரர் பிரனாய் தெரிவித்துள்ளார்.
சீனாவில், தாமஸ்-உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் வரும் ஏப். 28ல் துவங்குகிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை 33வது சீசனில் இந்திய அணி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்குகிறது. இந்தியா சார்பில் ஒற்றையரில் பிரனாய், லக்சயா சென், ஸ்ரீகாந்த், கிரண் ஜார்ஜ், பிரியான்ஷு ரஜாவத், இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, அர்ஜுன், துருவ் கபிலா, சாய் பிரதீக் இடம் பிடித்துள்ளனர்.
இம்முறை இந்திய அணி 'சி' பிரிவில் 14 முறை கோப்பை வென்ற இந்தோனேஷியா, தாய்லாந்து, இங்கிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து பிரனாய் கூறியது: தாமஸ் கோப்பையில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்குவது மகிழ்ச்சி. இதனை தக்கவைத்துக் கொள்வது சவாலானது. ஒவ்வொரு அணியிலும் திறமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி கடினப் பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இந்திய அணிக்கு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி நம்பிக்கை அளிக்கிறது. இதேபோல அர்ஜுன், துருவ் ஜோடியின் சமீபத்திய செயல்பாடு ஆறுதல் தருகிறது. ஒற்றையரில் லக்சயா சென் சரியான நேரத்தில் எழுச்சி கண்டுள்ளார். இந்திய அணி மீண்டும் கோப்பை வெல்ல தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டியது அவசியம். இது மனதளவில் ஊக்கமாக அமையும்.
இவ்வாறு பிரனாய் கூறினார்.

