/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
என்ன தவறு செய்தார் ரோகித் சர்மா... * கேப்டன் பதவி பறிப்பு பின்னணி
/
என்ன தவறு செய்தார் ரோகித் சர்மா... * கேப்டன் பதவி பறிப்பு பின்னணி
என்ன தவறு செய்தார் ரோகித் சர்மா... * கேப்டன் பதவி பறிப்பு பின்னணி
என்ன தவறு செய்தார் ரோகித் சர்மா... * கேப்டன் பதவி பறிப்பு பின்னணி
ADDED : ஏப் 02, 2024 11:16 PM

புதுடில்லி: ''மும்பை அணி கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்காததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடிவில்லை,'' என சித்து தெரிவித்தார்.
ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணிக்கு 5 முறை கோப்பை வென்று தந்தவர் ரோகித் சர்மா. இம்முறை இவருக்கு பதில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சக வீரர்கள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட, மும்பை அணி வரிசையாக மூன்று தோல்விகளை சந்தித்தது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சித்து கூறியது:
வரும் ஜூனில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் உலக கோப்பை 'டி-20' தொடர் நடக்க உள்ளது. இதற்கான இந்திய கேப்டனாக ரோகித் நீடிப்பாரா என்ற சந்தேகம் நிலவியது. உடனே சுதாரித்த மும்பை அணி நிர்வாகம் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை, 2023, டிசம்பரில் நியமித்தது. இரு மாதத்திற்கு பின் திருப்பம் ஏற்பட்டது. கேப்டனாக ரோகித் தொடர்வார் என 2024, பிப்ரவரியில் பி.சி.சி.ஐ., அறிவித்தது. சற்று முன்னதாக 2023, அக்டோபரில் இந்திய கேப்டனை உறுதி செய்திருந்தால், மும்பை அணியும் மாற்றம் செய்திருக்காது. இந்திய கேப்டனை அறிவித்த நேரம் தான் பிரச்னைக்கு முக்கிய காரணம்.
வெற்றி அவசியம்
மும்பை ரசிகர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் 'ஹீரோ', இந்திய அணியின் கேப்டன் என பல பெருமைக்குரிய ரோகித் சர்மாவை, மும்பை கேப்டனாக நியமிக்காததை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவர் என்ன தவறு செய்தார் என்பதே ரசிகர்களின் சிந்தனையாக உள்ளது.
விளையாட்டில் வெற்றிக்கு தான் மதிப்பு. முதல் மூன்று போட்டிகளில் பாண்ட்யா வென்று இருந்தால், எதிர்ப்பு சத்தம் வந்திருக்காது. அணித் தேர்வில் பாண்ட்யா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தோனியை பார்த்து பாடம் படிக்கலாம். சென்னை அணியில் கான்வேக்கு காயம் ஏற்பட, துவக்க வீரராக ரச்சின் ரவிந்திராவை கொண்டு வந்தார்.
பெங்களூரு அணியின் சுழற்பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். கோலி, டுபிளசி என தனிநபரை சார்ந்து இருப்பது வெற்றிக்கு உதவாது.
காத்திருக்கும் வாய்ப்பு
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது ஐ.பி.எல்., தொடரை சுற்றி வருகிறது. 'மினி உலக கோப்பை' தொடர் போல உள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் 'ஓவர்நைட்டில்' புகழ் அடையலாம். 'டி-20' உலக கோப்பை தொடருக்கான அணியிலும் வாய்ப்பு பெறலாம்.
இவ்வாறு சித்து கூறினார்.
பாண்ட்யா உறுதி
மும்பை அணி கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகலாம் என செய்திகள் வெளியாகின. இதை மறுக்கும் வகையில் பாண்ட்யா வெளியிட்ட செய்தியில்,'மும்பை அணி எப்போது நம்பிக்கை இழக்காது. ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. தொடர்ந்து போராடுவோம்,' என தெரிவித்துள்ளார்.
சென்னை 'பினிஷர்'
சித்து கூறுகையில்,''வாய்ப்பு கொடுத்தால் தான் திறமையை கண்டறிய முடியும். சென்னை அணியின் இளம் வீரர் ரிஸ்விக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். சிறந்த 'பினிஷராக' ஜொலிப்பார்,''என்றார்.

