/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தொடர்ந்து 8 சிக்சர்... 11 பந்தில் அரைசதம்: ஆகாஷ் குமார் சாதனை
/
தொடர்ந்து 8 சிக்சர்... 11 பந்தில் அரைசதம்: ஆகாஷ் குமார் சாதனை
தொடர்ந்து 8 சிக்சர்... 11 பந்தில் அரைசதம்: ஆகாஷ் குமார் சாதனை
தொடர்ந்து 8 சிக்சர்... 11 பந்தில் அரைசதம்: ஆகாஷ் குமார் சாதனை
ADDED : நவ 09, 2025 09:45 PM

சூரத்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் மேகாலயாவின் ஆகாஷ் குமார் சவுத்ரி வரிசையாக 8 சிக்சர் உட்பட 11 பந்தில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.
குஜராத்தின் சூரத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'பிளேட் குரூப்' போட்டியில் மேகாலயா, அருணாச்சல பிரதேசம் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 386/2 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கு அர்பித் படேவாரா (207), கேப்டன் கிஷான் லின்தோ (119), ராகுல் தலால் (144) கைகொடுத்தனர். அடுத்து வந்த ஆகாஷ் குமார் சவுத்ரி, முதல் 3 பந்தில் 2 ரன் (0, 1, 1) எடுத்தார். பின், லிமர் டபி (6,6,6,6,6,6), மோஹித் (6,6) பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார். வரிசையாக 8 சிக்சர் விளாசிய இவர், 11 பந்தில் அரைசதம் எட்டினார். முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 628/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஆகாஷ் (50 ரன், 14 பந்து, 8x6) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய அருணாச்சல பிரதேச அணி 73 ரன்னுக்கு சுருண்டு 'பாலோ-ஆன்' பெற்றது. ஆட்டநேர முடிவில் அருணாச்சல பிரதேச அணி 2வது இன்னிங்சில் 29/3 ரன் எடுத்திருந்தது.
அதிவேக அரைசதம்
முதல்தர போட்டியில் அதிவேக (11 பந்து) அரைசதம் விளாசிய வீரரானார் ஆகாஷ் குமார் சவுத்ரி. இதற்கு முன், லீசெஸ்டர்ஷையர் அணியின் வெய்ன் ஒயிட் 12 பந்தில் (எதிர்: எசக்ஸ், 2012) இச்சாதனை படைத்திருந்தார்.
மூன்றாவது வீரர்
முதல் தர போட்டியில் வரிசையாக 6 சிக்சர் பறக்கவிட்ட 3வது வீரரானார் ஆகாஷ் குமார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் சர் கார்பீல்டு சோபர்ஸ் (நாட்டிங்காம்ஷையர், 1968, கவுன்டி, எதிர்: கிளாமோர்கன், பவுலர்: மால்கம் நாஷ்), இந்தியாவின் ரவி சாஸ்திரி (பாம்பே, 1984-85, ரஞ்சி, எதிர்: பரோடா, பவுலர்: திலக் ராஜ்) இப்படி சாதித்தனர்.
தமிழகம் முன்னிலை
விசாப்பட்டனத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் தமிழகம் 182, ஆந்திரா 177 ரன் எடுத்தன. பாலசுப்ரமணியம் சச்சின் (51) கைகொடுக்க 2ம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 2வது இன்னிங்சில் 102/3 ரன் எடுத்து, 107 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

