/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: டெஸ்ட் தொடர் சமன்
/
இந்தியா 'ஏ' அணி ஏமாற்றம்: டெஸ்ட் தொடர் சமன்
ADDED : நவ 09, 2025 09:33 PM

பெங்களூரு: இரண்டாவது டெஸ்டில் இந்தியா 'ஏ' பவுலர்கள் ஏமாற்ற, தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமன் ஆனது.
இந்தியா வந்த தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் (4 நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா 'ஏ' வென்றது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 255, தென் ஆப்ரிக்கா 'ஏ' 221 ரன் எடுத்தன. இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 382/7 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. பின், 417 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, 3ம் நாள் முடிவில் 25/0 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர்களான ஜோர்டான் ஹெர்மன் (91), லெசேகோ செனோக்வானே (77), ஜுபைர் ஹம்சா (77), டெம்பா பவுமா (59) அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தனர். கேப்டன் அக்கர்மேன் (24) ஆறுதல் தந்தார். பின் இணைந்த கானர் எஸ்டெர்ஹுய்சென் (52*), டியான் வான் வூரன் (20*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 417/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா 'ஏ' சார்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் வீழ்த்தினார்.
சிறந்த 'சேஸ்'
இரண்டாவது இன்னிங்சில் 417 ரன்னை விரட்டிய தென் ஆப்ரிக்கா, 'ஏ' அணிகள் பங்கேற்கும் டெஸ்டில் அதிக ரன்னை 'சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன், இந்தியா 'ஏ' அணி 413 ரன்னை எட்டியது (எதிர்: ஆஸி., 'ஏ', 2025, இடம்: லக்னோ) சிறந்த வெற்றியாக இருந்தது.

