/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்
/
யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்
யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்
யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்
ADDED : ஜூலை 08, 2024 11:05 PM

ஹராரே: ''சதம் விளாசியது ஆரம்பம் தான். இன்னும் பல சாதனைகள் காத்திருக்கின்றன,'' என அபிஷேக் சர்மாவை பாராட்டியுள்ளார் யுவராஜ் சிங்.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் அறிமுகமான இந்திய இளம் துவக்க பேட்டர் அபிஷேக் சர்மா 'டக்' அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தோனி (எதிர், தென் ஆப்ரிக்கா, 2006, ஜோகனஸ்பர்க்) போன்ற வீரர்களே முதல் 'டி-20' போட்டியில் 'டக் அவுட்டானதால், கவலைப்பட தேவையில்லை என கிரிக்கெட் பிரபலங்கள் ஊக்கம் தந்தனர். இதற்கு ஏற்ப இரண்டாவது போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் அபிஷேக். 46 பந்தில் சதம் விளாசி, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் சர்மாவுக்கு, இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தான் குரு. இவரை போல 'சிக்சர்' விளாசுவதில் வல்லவராக உள்ளார். கடந்த ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக 16 போட்டிகளில் 484 ரன் (ஸ்டிரைக் ரேட் 204.21) குவித்தார். தற்போது இந்திய அணிக்காக சாதித்துள்ளார்.
'டக்' அவுட் மகிழ்ச்சி: இது குறித்து அபிஷேக் கூறுகையில்,''ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டி முடிந்ததும் இங்கிலாந்தில் உள்ள யுவராஜிடம் 'வீடியோ' அழைப்பு மூலம் பேசினேன். 'டக்' அவுட்டானதை கேட்டு ஏன் மகிழ்ச்சி அடைந்தார் என தெரியவில்லை. 'நல்ல துவக்கம்' என்றார். சதம் விளாசிய பின் மீண்டும் பேசினேன். அப்போது 'பெருமையாக இருக்கிறது. இது ஆரம்பம் தான். இன்னும் பல சாதனைகள் காத்திருக்கின்றன,'' என்றார்.
நான் கிரிக்கெட் வீரராக யுவராஜ் தான் காரணம். எனது வளர்ச்சிக்கு கடினமாக உழைத்தார். 2-3 ஆண்டுகள் பயிற்சி அளித்தார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு திட்டமிட போதிய அவகாசம் கிடைக்கவில்லை. இது எனக்கான நாள் என்ற உறுதியுடன் விளையாடினேன். 'உன் எண்ணம் போல் பந்துகளை விளாசு' என ருதுராஜ் ஆலோசனை கூறினார். இதற்கேற்ப விளையாடி, சதம் எட்டியது மகிழ்ச்சி,'' என்றார்.
'பேட்' ரகசியம் என்ன
பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் கேப்டன் சுப்மன் கில், அபிஷேக். இருவரும் நண்பர்கள். அபிஷேக் கூறுகையில்,''சிறப்பாக ஆட நினைக்கும் போதெல்லாம் சுப்மன் பேட்டை கடனாக வாங்குவேன். இது, 14 வயதுக்கு உட்பட்டேர் போட்டிகளில் இருந்து தொடர்கிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போதும் இவரது 'பேட்' பயன்படுத்தி சதம் விளாசினேன். இதற்காக சுப்மனுக்கு நன்றி,''என்றார்.
அப்பா 'அட்வைஸ்'
அபிஷேக் சர்மாவின் சிக்சர் விளாசும் திறனை ரோகித் சர்மாவுடன் ஒப்பிடுகின்றனர். அபிஷேக் கூறுகையில்,'இளம் பருவத்தில் எனது அப்பா தான் 'சிக்சர்' விளாச ஊக்கம் தந்தார். எல்லையை கடந்து பந்து பறக்க வேண்டும் என்பார். இதை பின்பற்றியே முதல் பந்தில் இருந்து விளாசுகிறேன்,'' என்றார்.
புது 'தலைவலி'
மூன்றாவது போட்டிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் வருகிறார். இதனால் அபிஷேக் மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவதில் சிக்கல் ஏற்படலாம். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் சுப்மனுக்கு அணியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்திய அணியின் 'பேட்டிங் ஆர்டர்' மாறுமா அல்லது ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.