/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஹா ஆகாஷ் தீப்... ஓஹோ இந்தியா: பர்மிங்ஹாம் டெஸ்டில் இமாலய வெற்றி
/
ஆஹா ஆகாஷ் தீப்... ஓஹோ இந்தியா: பர்மிங்ஹாம் டெஸ்டில் இமாலய வெற்றி
ஆஹா ஆகாஷ் தீப்... ஓஹோ இந்தியா: பர்மிங்ஹாம் டெஸ்டில் இமாலய வெற்றி
ஆஹா ஆகாஷ் தீப்... ஓஹோ இந்தியா: பர்மிங்ஹாம் டெஸ்டில் இமாலய வெற்றி
ADDED : ஜூலை 07, 2025 12:28 AM

பர்மிங்ஹாம்: எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அசத்திய இந்திய அணி, 336 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 10 (4+6) விக்கெட் வீழ்த்திய 'வேகப்புயல்' ஆகாஷ் தீப், வெற்றிக்கு கைகொடுத்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
மழையால் தாமதம்: இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 427/6 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை (180 ரன்) சேர்த்து இங்கிலாந்துக்கு 608 ரன் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து 72/3 ரன் எடுத்திருந்தது.
ஐந்தாவது நாள் ஆட்டம் மழை காரணமாக, ஒரு மணி நேரம், 40 நிமிடம் தாமதமாக துவங்கியது. 10 ஓவர் குறைக்கப்பட்டது. 80 ஓவரில் இன்னும் 536 ரன் தேவை என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
முதல் 5 விக்கெட்: ஆகாஷ் தீப் 'வேகத்தில்' போப் (24) போல்டானார். தொடர்ந்து மிரட்டிய இவரது பந்தில் ஹாரி புரூக் (23) எல்.பி.டபிள்யு., ஆனார். இங்கிலாந்து 83/5 ரன் எடுத்து தவித்தது. பின் கேப்டன் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் சற்று தாக்குப்பிடித்தனர். உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் திருப்பம் தந்தார். இவரது சுழலில் 'ஆபத்தான' ஸ்டோக்ஸ் (33) எல்.பி.டபிள்யு., ஆனார். 'ரிவியு' கேட்டும் பலன் கிடைக்காததால், இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 153/6 ரன் எடுத்து தவித்தது.
ஸ்மித் அரைசதம்: தனிநபராக போராடிய ஜேமி ஸ்மித், அரைசதம் எட்டினார். வோக்ஸ்(7) நிலைக்கவில்லை. ஆகாஷ் தீப் ஓவரில் வரிசையாக இரு சிக்சர் பறக்கவிட்டார் ஸ்மித். அடுத்த பந்தையும் துாக்கி அடித்தார். இம்முறை எல்லையில் வாஷிங்டன் பிடிக்க, ஸ்மித் (88, 9X4, 4X6)) அவுட்டானார். ஆகாஷ் தீப், டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா பந்தில் சிராஜின் அற்புத 'கேட்ச்சில்' ஜோஷ் டங் (2) வெளியேறினார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 238/8 மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை இந்திய கேப்டன் சுப்மன் கில் வென்றார்.
மூன்றாவது டெஸ்ட் வரும் ஜூலை 10ல் லார்ட்சில் துவங்குகிறது.
கோட்டை தகர்ந்தது
பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி முதல் வெற்றியை ருசித்தது. கடந்த 58 ஆண்டுகளில் இங்கு ஏற்கனவே பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றிருந்தது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இங்கிலாந்தின் கோட்டையாக கருதப்பட்ட இம்மைதானத்தில் கோலி, ரோகித் சர்மா தலைமையில் கூட வென்றதில்லை. பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்ட நிலையில், இளம் வீரர்களுடன் புதிய கேப்டன் சுப்மன் கில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடித் தந்துள்ளார்.
'மெகா' வெற்றி
இந்திய அணி, அன்னிய மண்ணில் தனது சிறந்த வெற்றியை (336 ரன்) பதிவு செய்தது. இதற்கு முன் 2016ல் நார்த் சவுண்டில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 318 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
* இது, ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 3வது சிறந்த வெற்றியானது. முதலிடத்தில் கடந்த ஆண்டு (இடம்: ராஜ்கோட்) இங்கிலாந்துக்கு எதிராக 434 ரன் வித்தியாசத்தில் வென்றது உள்ளது.
இளம் கேப்டன்
அன்னிய மண்ணில் வெற்றி தேடித்தந்த இளம் இந்திய கேப்டன் ஆனார் சுப்மன் கில் (25 ஆண்டு, 301 நாள்). இதற்கு முன், கவாஸ்கர் (26 ஆண்டு, 202 நாள், எதிர்: நியூசி., 1976, ஆக்லாந்து) இச்சாதனை படைத்திருந்தார்.
சிறந்த பந்துவீச்சு
இந்தியாவின் ஆகாஷ் தீப், இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் (4+6) சாய்த்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில், சிறந்த பந்துவீச்சை (10/187) பதிவு செய்தார் ஆகாஷ். இதற்கு முன் இங்கு, இந்தியாவின் சேட்டன் சர்மா (10/188, பர்மிங்ஹாம், 1986) சிறந்த பந்துவீச்சை பெற்றிருந்தார்.
ஸ்மித் 272 ரன்ஒரு டெஸ்டில் அதிக ரன் எடுத்த விக்கெட்கீப்பர் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் (272 ரன், 184 & 88, எதிர், இந்தியா, எட்ஜ்பாஸ்டன், 2025) 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடத்தில் ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர் (341 ரன், 142 & 199, எதிர், தெ.ஆ., 2001 ஹராரே, 287 ரன், 55 & 232*, எதிர், இந்தியா, நாக்பூர், 2000) உள்ளார்.
சரிந்த 'டாப்-ஆர்டர்'
இங்கிலாந்து அணி இரு இன்னிங்சிலும் 100 ரன் எடுப்பதற்குள் 'டாப்-5' விக்கெட்டுகளை (5/84, 5/83) இழந்தது. முனனதாக 2009ல் 5/63, 5/78 (எதிர், ஆஸி., ஹெடிங்லி) என சரிந்தது.
ஜடேஜா 100 வினாடி...
நேற்று ஜடேஜா, 100 வினாடிக்குள் ஒரு ஓவரை மின்னலாக வீசினார். இதன் காரணமாக உணவு இடைவேளைக்கு முன் கூடுதலாக ஒரு ஓவர் வீசும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. இந்த ஓவரை வீசிய வாஷிங்டன், ஸ்டோக்சை வெளியேற்றி அசத்தினார்.