/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சென்னை அணிக்கு ராயுடு எச்சரிக்கை
/
சென்னை அணிக்கு ராயுடு எச்சரிக்கை
UPDATED : மார் 29, 2025 12:08 AM
ADDED : மார் 27, 2025 11:26 PM

சென்னை: ''தோனி களமிறங்க வேண்டும் என்பதற்காக, சக வீரர்கள் அவுட்டாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல,'' என அம்பதி ராயுடு எச்சரித்தார்.
பிரிமியர் அரங்கில் சென்னை அணிக்கு 5 முறை கோப்பை வென்று தந்தவர் தோனி. தற்போது 43 வயதிலும் துடிப்பாக விளையாடுகிறார். மின்னல் வேகத்தில் 'ஸ்டம்பிங்' செய்கிறார். இவரை காணவே பெரும்பாலான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகின்றனர். களமிறங்கும் போது விண்ணைத்தொடும் அளவுக்கு 'விசில்' சத்தம் எழுப்புகின்றனர்.
இது பற்றி சென்னை அணிக்காக 2018-23ல் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராயுடு கூறியது: அறிமுக வீரராக நீங்கள் களமிறங்கும் போது ரசிகர்கள் எழுப்பும் சத்தம் விசித்திரமாக இருக்கும். விளையாடும் போது தான், அவர்கள் தோனியின் ரசிகர்கள் என்பது தெரிய வரும். தோனிக்கு பிறகே சென்னை அணிக்கு முன்னுரிமை கொடுப்பர். சென்னை அணியும் தோனியை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. 'தல' என சரியாகவே அழைக்கின்றனர். இவரே முக்கிய முடிவுகளை எடுக்கிறார். இவர் மீது ரசிகர்கள் பேரன்பு வைத்துள்ளனர். அவர் களமிறங்க ஏதுவாக, சக வீரர்கள் அவுட்டாக வேண்டுமென நினைக்கின்றனர். இது மிகவும் வித்தியாசமானது. கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல. அனைத்து வீரர்களும் அணியின் நலனுக்காக தியாகம் செய்கின்றனர்.
சக வீரர் பாதிப்பு: தோனி ஓய்வுக்கு பின், ரசிகர்களை கவர்ந்து இழுப்பதில் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்படும். இவரை தவிர வேறு நட்சத்திர வீரர்களை உருவாக்கவில்லை. ஜடேஜா போன்றவர்கள் பல முறை அணிக்கு கைகொடுத்துள்ள நிலையில், ஒருவரை மற்றும் போற்றும் 'சூப்பர் ஸ்டார்' கலாசாரம் வியக்க வைக்கிறது. அணியாக விளையாடும் போட்டியில், ஒருவருக்கு மட்டும் ஆதரவு அளிப்பதால், மற்ற வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தோனி தான் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு ராயுடு கூறினார்.