ADDED : மார் 04, 2024 10:42 PM

புதுடில்லி: ''புதிதாக முயற்சித்து பார்க்க தயங்காதவர் அஷ்வின். இதனால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் நீடிக்க முடிகிறது,'' என புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 37. சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 500 வது விக்கெட் சாய்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான தர்மசாலா போட்டி, இவரது 100வது டெஸ்ட் ஆக அமைய உள்ளது.
அஷ்வின் குறித்து இந்திய வீரர் புஜாரா 36, கூறியது:
அஷ்வினை பொறுத்தவரையில் பேட்டர்களின் மனநிலையை தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி பந்துவீசுவார். அவர்களை விட எப்போதும் ஒரு அடி முன்னதாக இருப்பார். சின்ன சின்ன விஷயங்களைக் கூட கணக்கில் எடுத்துக் கொண்டு சுதாரிப்பாக செயல்படுவார். ஒவ்வொரு பந்துக்கும் திட்டமிட்டு செயல்படுவார்.
சமீபத்தில் டெஸ்டில் 500 விக்கெட் சாய்த்தார். இவருக்கு 100 வது டெஸ்டில் பங்கேற்கும் தகுதி உள்ளது. அணிக்காக எவ்வித சவாலையும் சந்திக்க தயாராக இருப்பவர்.
மூன்று வித கிரிக்கெட்டில் விளையாடினாலும், நீண்ட ஆண்டு நீடித்துள்ளார். எதையும் புதியதாக செய்ய வேண்டும் என்ற மனநிலை தான் இதற்கு காரணம். புதிய முயற்சிகளுக்காக எப்போதும் அவர் பயப்பட்டதில்லை, மற்றவர்கள் என்ன சொல்வர் என தயங்கியதும் இல்லை. முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்றாலும், முயற்சிக்க தவறமாட்டார்.
அவரது பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்கிறீர்கள் என்றால், உடனடியாக பவுலிங் திட்டத்தை மாற்றி விடுவார். பேட்டர் 'ஸ்வீப் ஷாட்' அடித்தார் என்றால், பந்தை 'யார்க்கர்' போல வீசி, 'எல்.பி.டபிள்யு.,' முறையில் அவுட்டாக்கி விடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
