181 ரன் விளாசிய ஆர்யா: ‘டி–20’ கிரிக்கெட்டில் அபாரம்
181 ரன் விளாசிய ஆர்யா: ‘டி–20’ கிரிக்கெட்டில் அபாரம்
ADDED : நவ 24, 2026 09:50 PM

இந்துார்: ‘டி–20’ போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என சாதனை படைத்தார் பிரியான்ஷ் ஆர்யா.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சையது முஷ்தாக் அலி டிராபி (‘டி–20’) 19வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று இந்துாரில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி பீல்டிங் செய்தது.
ஆர்யா அசத்தல்
டில்லி அணிக்கு கேப்டன் பிரியான்ஷ் ஆர்யா, யாஷ் துல் (8) ஜோடி துவக்கம் தந்தது. பிரியான்ஷ் ஆர்யா சிக்சர் மழையாக பொழிந்தார்.
சிலம்பரசன் வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து 6, 6, 4 என விளாசிய ஆர்யா, 22 ரன் எடுத்தார். சாய் கிஷோர் (5வது) ஓவரில் 6, 6, 4, 0, 6 என மிரட்டினார். சித்தார்த் வீசிய 7வது ஓவரிலும் மிரட்டிய ஆர்யா, அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடிக்க, மொத்தம் 24 ரன் எடுக்கப்பட்டன.
ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு விரட்டிய ஆர்யா, 36 பந்தில் சதம் கடந்தார். இவருக்கு கைகொடுத்த நிதிஷ் ராணா, 18 ரன்னில் அவுட்டானார். தேஜஸ்வி (8) ஏமாற்றினார்.
ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் விளாசலை நிறுத்தாத ஆர்யா, சாய் கிஷோர், ராஜ்குமார் என எந்த பவுலரையும் விட்டுவைக்கவில்லை. இவர், 68 பந்தில் 181 ரன் (19X6, 7X4) எடுத்த நிலையில், சித்தார்த் சுழலில் சிக்கினார். ‘டி–20’ அரங்கில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்தது. டில்லி அணி 20 ஓவரில் 275/5 ரன் குவித்தது.
பேட்டிங் ஏமாற்றம்
தமிழக அணிக்கு அமித் சாத்விக் (21), பாலசுப்ரமணியம் (4) ஜோடி துவக்கம் கொடுத்தது. துஷார் ரஹேஜா (31), சித்தார்த் (24), ஷாருக்கான் (30), ரித்திக் (19) போராடிய போதும் வெற்றிக்கு போதவில்லை. கேப்டன் சாய் கிஷோர் 21 ரன் எடுத்தார். தமிழக அணி 18.3 ஓவரில் 159 ரன்னில் ஆல் அவுட்டானது. டில்லி அணி 116 ரன்னில் வெற்றி பெற்றது.
முதல் வீரர்
நேற்று 68 பந்தில் 181 ரன் குவித்த பிரியான்ஷ் ஆர்யா, 25, ‘டி–20’ அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் ஆனார். முன்னதாக 2021ல் இந்திய வீராங்கனை கிரண் நவ்கிரே 76 பந்தில் 162 ரன் எடுத்திருந்தார். இந்திய வீரர்களில் ராகுல் 152 ரன் (67 பந்து, 2026) எடுத்ததே அதிகம்.
* சையது முஷ்தாக் தொடரில் அதிவேகமாக 150 ரன் எடுத்த வீரர் ஆனார் ஆர்யா (60 பந்து).
* உலக ‘டி–20’ல் அதிக ரன் எடுத்தவர்களில் டைட்டன்ஸ் அணியின், தென் ஆப்ரிக்க வீரர் லுஹான் டிரி பிரிடோரியஸ் (188 ரன், 79 பந்து, 2026, அக். 2) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரு இடத்தில் ஆர்யா (68ல் 181), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (66ல் 175) உள்ளனர்.
* ‘டி–20’ போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் வரிசையில் பின் ஆலனுடன் (19 சிக்சர், 2025, நியூசி.,) முதலிடத்தை சமன் செய்தார் ஆர்யா (19).
* சையது முஷ்தாக் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆர்யா (19).
மூன்றாவது அதிகம்
டில்லி அணி நேற்று 275/5 ரன் எடுத்தது. சையது முஷ்தாக் அலி டிராபி தொடரில் எடுக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை சமன் (பஞ்சாப் 275/6, 2023) சமன் செய்தது. முதல் இரு இடத்தில் பரோடா (349/5, 2024), பஞ்சாப் (310/5, 2025) அணிகள் உள்ளன.
181 ரன்
68 பந்து
19 சிக்சர்
7 பவுண்டரி
266.17 ஸ்டிரைக் ரேட்
