/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஷஸ்: ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி
/
ஆஷஸ்: ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி
ADDED : டிச 07, 2025 11:01 PM

பிரிஸ்பேன்: பகலிரவு டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 334, ஆஸ்திரேலியா 551 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 134/6 ரன் எடுத்திருந்தது.
நேசர் அசத்தல்: நான்காம் நாள் ஆட்டத்தில் மைக்கேல் நேசர் பந்தில் ஜாக்ஸ் (41) அவுட்டானார். கேப்டன் ஸ்டோக்ஸ், 148 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 50 ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 241 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் நேசர் 5 விக்கெட் கைப்பற்றினார்.
சுலப இலக்கு: பின், 65 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (22) ஆறுதல் தந்தார். லபுசேன் (3) சோபிக்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் மணிக்கு 150.5 கி.மீ., 'வேகத்தில்' வீசிய பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பிரிஸ்பேன் மைதானத்தில் தனது 1000வது டெஸ்ட் ரன்னை எட்டினார். அட்கின்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மித் வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 69/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் (23), வெதரால்டு (17) அவுட்டாகாமல் இருந்தனர். 'ஆல்-ரவுண்டராக' அசத்திய ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (8 விக்., 77 ரன்) ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டில் டிச. 17ல் துவங்குகிறது.
தொடரும் ஆதிக்கம்
பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை விளையாடிய 15 போட்டியில், 14ல் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் மட்டும் 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஸ்மித்-ஆர்ச்சர் மோதல்
இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ஆர்ச்சர் வீசிய 9வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மித், அடுத்த பந்தை அடிக்காமல் கீப்பரிடம் விட்டுவிட்டார். அப்போது ஆர்ச்சர், ஸ்மித்திடம் சென்று ஏதோ கூறி வம்பிழுத்தார். இதற்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித், அடுத்த இரு பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
திருப்பம் தந்த 'கேட்ச்'
மைக்கேல் நேசர் வீசிய 70வது ஓவரின் முதல் பந்தை ஜாக்ஸ் அடித்தார். அப்போது 'ஸ்லிப்' பகுதியில் 'பீல்டிங்' செய்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், பந்தை ஒற்றை கையால் 'கேட்ச்' செய்தார். இது, போட்டியில் திருப்பமாக அமைந்தது. மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் இழந்த இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை.

