ADDED : டிச 07, 2025 11:06 PM

புதுடில்லி: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்தானது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 29. மும்பையை சேர்ந்த இவர், உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இவர், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை 30, நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம், கடந்த நவ. 23ல் நடக்க இருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே சமூக வலைதளத்தில் பலாஷ் முச்சல் தொடர்பாக தவறான செய்திகள் பரவின. இதனால் இவர்களது திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஸ்மிருதி வெளியிட்ட அறிக்கையில்,'எனது திருமணம் குறித்து ஏராளமாக ஊகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வெளிப்படையாக பேச வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். எனது திருமணம் ரத்து செய்யப்பட்டது. இவ்விஷயத்தை இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையை மதித்து, நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவுக்காக நிறைய கோப்பை வென்று தருவேன் என நம்புகிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.

