/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜெய்ஸ்வால் விண்ணை தொடலாம்: காம்பிர் சொல்கிறார் புது 'பார்முலா'
/
ஜெய்ஸ்வால் விண்ணை தொடலாம்: காம்பிர் சொல்கிறார் புது 'பார்முலா'
ஜெய்ஸ்வால் விண்ணை தொடலாம்: காம்பிர் சொல்கிறார் புது 'பார்முலா'
ஜெய்ஸ்வால் விண்ணை தொடலாம்: காம்பிர் சொல்கிறார் புது 'பார்முலா'
ADDED : டிச 07, 2025 11:15 PM

விசாகப்பட்டினம்: ''ஒருநாள் போட்டியில், முதல் 30 ஓவரில் அடக்கி வாசிக்க வேண்டும். அடுத்த 20 ஓவரில் 'டி-20' போல விளாச வேண்டும். இந்த 'பார்முலா'வை ஜெய்ஸ்வால் பின்பற்றினால், உச்சம் தொடலாம்,'' என காம்பிர் தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் (116) விளாச, இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்றது.
விவேகமான சதம்: சமீப காலமாக இடது கை 'வேகங்களிடம்' தடுமாறிய ஜெய்ஸ்வால், 3வது போட்டியில் யான்சென் பந்துகளை சாதுர்யமாக கையாண்டார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடி, 75 பந்துகளில் அரைசதம் எட்டினார். போகப்போக விளாச துவங்கினார். அடுத்த 50 ரன்னை 35 பந்துகளில் அடித்து, ஒருநாள் போட்டியில் முதல் சதம் கடந்தார். அதிரடி மட்டுமல்ல பொறுமையாகவும் விளையாட முடியும் என நிரூபித்தார். காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் அணிக்கு திரும்ப உள்ளனர். இதனால் ஜெய்ஸ்வால் இனி வாய்ப்பு பெறுவது கடினம். 'டி-20' அணியில் இவர் சேர்க்கப்படுவதில்லை. அடுத்த வாய்ப்புக்காக ஜெய்ஸ்வால் காத்திருக்க வேண்டும்.
இது பற்றி இந்திய பயிற்சியாளர் காம்பிர் கூறியது: உலக கோப்பை தொடருக்கு (2027, 50 ஓவர்) முன் 20-25 திறமையான வீரர்களை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். இதை மனதில் வைத்து தான் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். கேப்டன் சுப்மன் திரும்பும் போது, அவரே துவக்க வீரராக களமிறங்குவார். அப்போது ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்றோர் காத்திருக்க வேண்டும். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தேடி வரும் போது, சாதிக்க தயாராக இருக்க வேண்டும்.
புதிய அணுகுமுறை: ஒருநாள் போட்டிக்கான 'பார்முலா'வை உருவாக்கி கொள்வது அவசியம். 30, 20 ஓவர் என இரண்டாக பிரித்து விளையாடலாம். முதல் 30 ஓவரை, ஒருநாள் போட்டி போல நிதானமாக ஆட வேண்டும். ஜெய்ஸ்வால் போன்ற திறமையான வீரர், 30 ஓவர் தாக்குப்பிடித்தால், சதத்தை நெருங்கிவிடலாம். அடுத்த 20 ஓவரை 'டி-20' பாணியில் அதிரடியாக ஆடலாம். ஜெய்ஸ்வால் நான்காவது ஒருநாள் போட்டியில் தான் பங்கேற்றிருக்கிறார். ஒருநாள் போட்டிக்கான தனது அணுகுமுறையை கண்டறிந்து கொண்டால், இவருக்கு வானமே எல்லை.
'டாப்-ஆர்டர்' பேட்டரான ருதுராஜை 4வது இடத்தில் களமிறக்கினோம். 2வது போட்டியில் சதம் அடித்து திறமை நிரூபித்தார்.
இவ்வாறு காம்பிர் கூறினார்.
'ரோ-கோ' வாய்ப்பு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களான ரோகித், 38 (57, 75), கோலி, 37 (135, 102, 65*) அசத்தினர். இவர்களுக்கு உலக கோப்பை தொடரில் (2027) வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது பற்றி காம்பிர் கூறுகையில்,''ரோகித், கோலி (சுருக்கமாக ரோ-கோ) உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். ஒருநாள் போட்டியில் இவர்களது அனுபவம் அணிக்கு அவசியம். உலக கோப்பை தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், இப்போது எதுவும் கூற இயலாது. தற்போதைய நிலையில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற இளம் வீரர்களும் அசத்துகின்றனர்,''என்றார்.
வாஷிங்டனுக்கு பாராட்டு
இந்திய அணியின் 'பேட்டிங்' வரிசையை அடிக்கடி மாற்றுவது பயிற்சியாளர் காம்பிரின் வழக்கம். தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் எந்த இடத்தில் களமிறங்கப் போகிறார் என்பது அவருக்கே தெரியாது.
இது பற்றி காம்பிர் கூறுகையில்,''ஒருநாள் போட்டியில் 'ஓபனிங்' தவிர மற்றபடி பேட்டிங் வரிசைக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை. வாஷிங்டன் சுந்தர் 3,5,7,8 என பல இடங்களில் பேட் செய்துள்ளார். இவரை போன்று அணியின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர்கள் தான் தேவைப்படுகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் 5வது இடத்தில் களமிறங்க சொன்னோம். அசராமல் 101 ரன் அடித்தார். அடுத்து, ஓவல் டெஸ்டில் 8வது இடத்தில் வந்து, 53 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஈடன் கார்டன் டெஸ்டில் 3வது இடத்திலும் கவுகாத்தி டெஸ்டில் 8வது இடத்திலும் களமிறங்கி கைகொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். இந்திய கிரிக்கெட்டில் இவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது,''என்றார்.

