தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நனவான 80 சதவீத கனவு... * கேப்டன் சூர்யகுமார் பெருமிதம்

நனவான 80 சதவீத கனவு... * கேப்டன் சூர்யகுமார் பெருமிதம்

நனவான 80 சதவீத கனவு... * கேப்டன் சூர்யகுமார் பெருமிதம்


ADDED : மார் 17, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''கேப்டனாக 80 சதவீத வெற்றியை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி, கல்லுாரியில் கூட இந்த இலக்கை எட்டவில்லை'' என, சூர்யகுமார் தெரிவித்தார்.

'டி-20' அணியின் கேப்டனாக 2024ல் நியமிக்கப்பட்டார் சூர்யகுமார். இதற்கு பின் இந்தியா பங்கேற்ற 52 போட்டியில் 42ல் வெற்றி தேடித் தந்தார். இதன் வெற்றி சதவீதம் 80.76. சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடரில் 242 ரன் (9 போட்டி) விளாசிய இவர், இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார்.

இது பற்றி சூர்யகுமார் கூறியது:

பள்ளி, கல்லுாரியில் படிக்கும் போது 80 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற விரும்பினேன். ஆனால், 50-60 சதவீதத்தை கூட கடக்க முடியவில்லை. தற்போது 'டி-20' போட்டியில் எனது தலைமையில் 80 சதவீத வெற்றியை இந்தியா எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் புள்ளிவிபரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது. இருப்பினும் தோல்வி பிடிக்காது. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற விரும்புவேன்.

நான் நன்றாக படிக்க வேண்டுமென பெற்றோர் ஆசைப்பட்டனர். சிறிது காலத்திலேயே எனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்பதை புரிந்து கொண்டனர். நான் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து, தேவையான ஆதரவு கொடுத்தனர். 'எதிர்காலத்தில் கிரிக்கெட் கைகொடுக்காவிட்டால், வேறு திட்டம் பற்றி யோசிப்போம்' என ஊக்கம் அளித்தனர். நல்லவேளை 'பிளான் பி' தேவைப்படவில்லை. தொடர்ந்து கிரிக்கெட்டில் பிரகாசித்தேன்.

வித்தியாசம் என்ன

கடந்த 2024ல் 'டி-20' உலக கோப்பை வென்ற போது ரோகித் சர்மா, கோலி, ரவிந்திர ஜடேஜா என அனுபவ வீரர்கள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் தங்களது பணி பற்றி தெரியும். இம்முறை 25-27 வயதான இளம் வீரர்கள் நிறைய பேர் இருந்தனர். இவர்களுக்கு இந்தியாவில் உலக கோப்பை வென்றால் ஏற்படும் உணர்வு, மைதானத்தில் 50,000-1 லட்சம் ரசிகர்களின் உற்சாகத்தை சமாளிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.

2024ல் வீரனாக, 2026ல் கேப்டனாக, உலக கோப்பை வென்றேன். இரு தருணத்திலும் ஒரே மாதிரியான உணர்வு ஏற்பட்டது. இம்முறை இந்திய மண்ணில் கோப்பை வெல்ல வேண்டும், ஆமதாபாத் மைதானத்தில் சாதிக்க வேண்டும் என்பதால் கூடுதல் உணர்ச்சிவசத்துடன் இருந்தோம். திறமை அடிப்படையில் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. 2024ல் அனுபவ நட்சத்திரங்களின் உற்சாகம் என்றால்; 2026ல் இளம் படையின் அனல் பறக்கும் பேரார்வம் கோப்பை வெல்ல உதவியது.

இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.



மனைவி சொல்லே மந்திரம்

சூர்யகுமார் கூறுகையில்,''2018ல் என் மனைவி தேவிஷா சில கேள்விகளை நேர்மையாக கேட்டார். 'உங்களுடன் விளையாடியவர்களில் பலர், இப்போது இந்திய அணிக்காக விளையாடுகின்றனர். உங்களுக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்க விருப்பம் இருக்கிறதா... அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்,' என்றார். இதற்கு பின் உணவில் அக்கறை செலுத்தினேன். நண்பர்களுடன் சுற்றுவது, வார இறுதி நாட்களில் ஓய்வை தவிர்த்தேன். கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்தினேன். இதன் பலனாக 2018ல் பிரிமியர் தொடரில் மும்பை அணிக்காக 512 ரன் எடுத்தேன். உள்ளூர் போட்டியிலும் அசத்தினேன். 2020ல் மும்பை அணியின் 'பினிஷராக' 480 ரன் குவித்தேன். 2021ல் இந்திய 'டி-20' அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

என் வளர்ச்சியில், மனைவி தேவிஷாவுக்கு முக்கிய பங்கு உண்டு. 'வீட்டில் கிரிக்கெட்டிற்கு இடமில்லை; இங்கு 'சூப்பர்ஸ்டார்' சூர்யகுமார் அல்ல, வெறும் சூர்யா தான். சாப்பிட்டு முடித்ததும், 'பிளேட்டை' பாத்திரம் கழுவும் இடத்தில் வைக்க வேண்டும்' என்பார். இது போன்ற சின்ன விஷயங்கள் குடும்ப வாழ்க்கையை அழகானதாக மாற்றுகிறது,''என்றார்.

மன்னிப்பு

'டி-20' உலக கோப்பை பைனலில், இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங் எறிந்த பந்து, நியூசிலாந்தின் டேரில் மிட்சலின் கால் பேடு, தொடை பகுதியை தாக்கியது. இதனால் மிட்சல் கோபப்பட்டார். உடனே கேப்டன் சூர்யகுமார் தலையிட்டு சமாதானம் செய்தார்.

இது பற்றி சூர்யகுமார் கூறுகையில்,''கேப்டன் என்ற முறையில் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அர்ஷ்தீப் செயலுக்காக மிட்சலிடம் மன்னிப்பு கேட்டேன். பிறகு வேண்டுமென்றே பந்தை எறியவில்லை என அர்ஷ்தீப் சிங்கும் 'சாரி' கேட்டார்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us