/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: முதல் ஒருநாள் போட்டியில்
/
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: முதல் ஒருநாள் போட்டியில்
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: முதல் ஒருநாள் போட்டியில்
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: முதல் ஒருநாள் போட்டியில்
ADDED : செப் 14, 2025 10:34 PM

நியூ சண்டிகர்: முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நியூ சண்டிகரில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய மந்தனா, ஒருநாள் போட்டி அரங்கில் தனது 32வது அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரதிகா, 67 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்த போது மந்தனா (58) 'ரன் அவுட்' ஆனார். அலானா கிங் 'சுழலில்' பிரதிகா (64) சிக்கினார்.
ஹர்லீன் அரைசதம்: கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (11) நிலைக்கவில்லை. கார்ட்னர் வீசிய 36வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ஹர்லீன் தியோல், அலானா கிங் ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய ஹர்லீன், 50 பந்தில் அரைசதம் எட்டினார். மேகன் ஷ்கட் 'வேகத்தில்' ஹர்லீன் (54) வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (18), ரிச்சா கோஷ் (25), ராதா யாதவ் (19) சோபிக்கவில்லை.
இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 281 ரன் எடுத்தது. தீப்தி சர்மா (20), ஸ்ரீ சரணி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
லிட்ச்பீல்டு அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி (27) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய லிட்ச்பீல்டு (88) அரைசதம் கடந்தார். எலிஸ் பெர்ரி (33) 'ரிட்டயர்டு ஹர்ட்' ஆனார். பின் இணைந்த பெத் மூனே, அனாபெல் சதர்லாந்து ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர்.ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மூனே (77), அனாபெல் (54) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஹர்மன்பிரீத் '150'
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தனது 150வது ஒருநாள் போட்டியில் விளையாடினார். மிதாலி ராஜ் (232 போட்டி), ஜுலான் கோஸ்வாமிக்கு (204) பின், இம்மைல்கல்லை எட்டிய 3வது இந்திய வீராங்கனையானார்.
இரண்டாவது முறை
ஒருநாள் போட்டி அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது முறையாக 281 ரன் குவித்தது இந்தியா. இதற்கு முன் 2017ல் டெர்பியில் நடந்த போட்டியில் 281/4 ரன் எடுத்திருந்தது. தவிர இது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் 2வது அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2023ல் 282/8 ரன் (இடம்: மும்பை) எடுத்ததே அதிகம்.