ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா: மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி
ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா: மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி
UPDATED : டிச 21, 2025 11:01 PM
ADDED : டிச 21, 2025 10:42 PM

அடிலெய்டு: மூன்றாவது டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி, 82 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என கைப்பற்றி முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி தொடர்ந்து 3வது தோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371, இங்கிலாந்து 286 ரன் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 349 ரன் எடுத்தது. பின், 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4ம் நாள் முடிவில் 207/6 ரன் எடுத்திருந்தது.
ஸ்டார்க் அசத்தல்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ் ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. ஜேமி ஸ்மித் அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது ஸ்டார்க் 'வேகத்தில்' ஸ்மித் (60) வெளியேறினார். தொடர்ந்து அசத்திய ஸ்டார்க் பந்தில் ஜாக்ஸ் (47) அவுட்டானார். அடுத்து வந்த பிரைடன் கார்ஸ் நிதானமாக விளையாடினார். ஆனால் இவருக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் (3), ஜோஷ் டங் (1) ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 352 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. பிரைடன் கார்ஸ் (39) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை கைப்பற்றி, ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
முதல் இன்னிங்சில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, ஆட்ட நாயகன் விருது வென்றார். நான்காவது டெஸ்ட் ('பாக்சிங் டே'), வரும் டிச. 26ல் மெல்போர்னில் துவங்குகிறது.
5,462 நாட்கள்
இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய டெஸ்டில் வெற்றி பெற்று 5,462 நாட்கள் ஆனது. கடைசியாக 2011ல் (ஜன. 3-7) சிட்னி டெஸ்டில், இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது.
லியான் காயம்
பீல்டிங்கின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியானின் வலது கால் தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட, பாதியில் வெளியேறினார். அப்போது இங்கிலாந்து அணி 249/6 ரன் எடுத்திருந்தது.
11 நாளில்...
ஆஸ்திரேலிய அணி 11 நாளில், ஆஷஸ் தொடரை இம்முறை கைப்பற்றியது. பெர்த் டெஸ்டில் 2 நாளில் (நவ. 21-22) வென்ற ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன் டெஸ்டில் 4 (டிச. 4-7), அடிலெய்டு டெஸ்டில் 5 நாளில் (டிச. 17-21) வெற்றி பெற்றது.
