/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம்
/
கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம்
கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம்
கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம்
ADDED : ஆக 10, 2025 10:06 PM

டார்வின்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய ஆஸ்திரேலியா, 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டார்வினில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (2), ஜோஷ் இங்லிஸ் (0), கேப்டன் மிட்செல் மார்ஷ் (13) ஏமாற்றினர். கேமிரான் கிரீன் (35) ஓரளவு கைகொடுத்தார். ஆஸ்திரேலிய அணி 75 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த டிம் டேவிட், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அபாரமாக ஆடிய இவர், 29 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 83 ரன்னில் (8 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 178 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட் சாய்த்தார்.
பிரவிஸ் ஏமாற்றம்: சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் (12), லுவான் பிரிட்டோரியஸ் (14), டிவால்ட் பிரவிஸ் (2) சோபிக்கவில்லை. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (37) ஆறுதல் தந்தார். ரியான் ரிக்கெல்டன் அரைசதம் கடந்தார்.
கடைசி ஓவரில், வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டன. பென் டிவார்ஷுயிஸ் 'வேகத்தில்' ரிக்கெல்டன் (71), ரபாடா (10) வெளியேறினர். இந்த ஓவரில் 3 ரன் மட்டும் கிடைத்தது.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட், டிவார்ஷுயிஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை டிம் டேவிட் (ஆஸி.,) வென்றார்.
9வது வெற்றி
தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலியா, சர்வதேச 'டி-20' அரங்கில் தொடர்ச்சியாக 9வது வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் 2024ல் வரிசையாக 8 போட்டியில் வென்றிருந்தது. உகாண்டா அணி, தொடர்ச்சியாக 17 போட்டியில் வெற்றி பெற்றது உலக சாதனையாக உள்ளது.