ஆஸ்திரேலிய பெண்கள் 'ஹாட்ரிக்' வெற்றி: 'டி-20' உலக கோப்பையில்...
ஆஸ்திரேலிய பெண்கள் 'ஹாட்ரிக்' வெற்றி: 'டி-20' உலக கோப்பையில்...
ADDED : ஜூன் 20, 2026 11:22 PM

சவுத்தாம்ப்டன்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய பெண்கள் அணி, 98 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து, வேல்சில், பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. நேற்று, சவுத்தாம்ப்டனில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனே (74), ஆஷ்லி கார்ட்னர் (58) அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தனர். ஜார்ஜியா வேர்ஹாம் (41) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன் எடுத்தது.
சவலான இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 121/3 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கேப்டன் டி லீட் (56), ஸ்டெர்ரே காலிஸ் (44) ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கிம் கார்த் 2 விக்கெட் கைப்பற்றினார். முதலிரண்டு போட்டியில் தென் ஆப்ரிக்கா, வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
சவுத்தாம்ப்டனில் நடந்த மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதி்ல் வங்கதேச அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாதிக்குமா இந்தியா
மான்செஸ்டரில் நடக்கவுள்ள 'ஏ' பிரிவு போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா, இன்றும் அசத்தினால் 'ஹாட்ரிக்' வெற்றி பெறலாம்.
