/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பி.சி.சி.ஐ., தலைவர் மிதுன் மன்ஹாஸ்
/
பி.சி.சி.ஐ., தலைவர் மிதுன் மன்ஹாஸ்
ADDED : செப் 28, 2025 11:24 PM

மும்பை: பி.சி.சி.ஐ., புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வானார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக 2022, அக்., முதல் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி இருந்தார். கடந்த ஜூலை மாதம் 70 வயதானதால், பி.சி.சி.ஐ., விதிப்படி இவரது பதவி முடிவுக்கு வந்தது. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, தற்காலிக தலைவராக இருந்தார். இப்பதவிக்கு டில்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹாஸ் 45, மட்டும் விண்ணப்பித்திருந்தார்.
மும்பையில், பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மிதுன் மன்ஹாஸ் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வானார். பி.சி.சி.ஐ.,யின் 37வது தலைவாரானார் மிதுன்.
பி.சி.சி.ஐ., செயலராக தேவஜித் சைகியா, பிரிமியர் லீக் நிர்வாகக் குழு தலைவராக அருண் துமால் நீடிக்கின்றனர். கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் ரகுராம் பாட், பொருளாளராக தேர்வானார். பொருளாளராக இருந்த பிரப்தேஜ் பாட்டியா, இணை செயலரானார்.
நீத்து டேவிட் பதவிக் காலம் முடிந்தையடுத்து, இந்திய பெண்கள் அணி தேர்வுக்குழு தலைவராக அமிதா சர்மா 43, அறிவிக்கப்பட்டார். முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான இவர், இந்தியாவுக்காக (2002-2014) 5 டெஸ்ட் (5 விக்.,), 116 ஒருநாள் (87), 41 சர்வதேச 'டி-20' (16) போட்டிகளில் விளையாடினார்.
முன்னாள் இந்திய வீரர்களான ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா, இந்திய சீனியர் அணி தேர்வுக்குழுவில் சேர்க்கப்பட்டனர். முன்னாள் தமிழக பேட்டர் சரத், ஜூனியர் தேர்வுக்குழுவுக்கு திரும்பினார்.
யார் இவர்
ஜம்மு காஷ்மீரில், 1979, அக். 12ல் பிறந்தவர் மிதுன் மன்ஹாஸ். சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டரான' இவர், பகுதி நேர விக்கெட் கீப்பராகவும் இருந்துள்ளார். உள்ளூர் போட்டியில் டில்லி (1998--2015), ஜம்மு காஷ்மீர் (2015--17) அணிகளுக்காக விளையாடினார்.
இதுவரை 157 முதல்தரம் (9714 ரன், 40 விக்கெட்), 130 'லிஸ்ட் ஏ' (4126 ரன், 25 விக்கெட்), 91 'டி--20' (1170 ரன், 5 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.