UPDATED : மே 20, 2024 12:03 AM
ADDED : மே 20, 2024 12:01 AM

பெங்களூரு: பெங்களூரு அணியின் புதிய 'ஹீரோ'வாக ஜொலிக்கிறார் யாஷ் தயாள்.
பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி(218/5), சென்னையை(191/7) வீழ்த்தியது. இதன் மூலம் 'நடப்பு சாம்பியன்' சென்னை வெளியேறியது. பெங்களூரு 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
பெங்களூரு தரப்பில் கடைசி ஓவரை கச்சிதமாக வீசிய 'வேகப்புயல்' யாஷ் தயாள், வெற்றி நாயகனாக திகழ்ந்தார். இந்த ஓவரில் சென்னைக்கு 35 ரன் எடுத்தால் வெற்றி, 17 ரன் எடுத்தால் 'பிளே ஆப்' வாய்ப்பு என்ற நிலை இருந்தது. யாஷ் தயாள் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் தோனி. அடுத்த 'ஸ்லோ' பந்தில் தோனியை அவுட்டாக்கி திருப்பம் ஏற்படுத்தினார் யாஷ். எஞ்சிய 4 பந்தில் 1 ரன் தான் கொடுத்தார். மொத்தம் 7 ரன் மட்டும் கொடுத்து அசத்தினார்.
கடந்த 2023ல் ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார் யாஷ் தயாள். அப்போது கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டன. யாஷ் தயாள் பந்துவீசினார். முதல் பந்தில் உமேஷ் ஒரு ரன் எடுத்தார். அடுத்த 5 பந்தில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்சர் விளாசி, வெற்றி தேடித் தந்தார். யாஷ் தயாள் சோகத்துடன் களத்தை விட்டு வெ ளியேறினார். தற்போது புதிய 'ஹீரோ'வாக மாறியுள்ளார்.
யாஷ் தயாள் கூறுகையில்,''முதல் பந்தை தோனி சிக்சருக்கு அனுப்பிய போது, உள்மனதில் ரிங்கு சிங் விளாசிய 5 சிக்சர்கள் நினைவுக்கு வந்தன. இதற்கு பின் நான் ஸ்கோர் போர்டை பார்க்கவில்லை. தன்னம்பிக்கையுடன் பந்துவீசி சாதித்தேன். தீவிர பயிற்சி மேற்கொண்டது பலனை தந்தது,''என்றார்.
உள்ளூர் போட்டிகளில் உ.பி., அணிக்காக விளையாடும் சக வீரர் ரிங்கு சிங், யாஷ் தயாளுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில்,' எல்லாம் கடவுளின் திட்டம்' என சரியாக குறிப்பிட்டிருந்தார்.
