/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி: மும்பை அணி போராட்டம் வீண்
/
கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி: மும்பை அணி போராட்டம் வீண்
கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி: மும்பை அணி போராட்டம் வீண்
கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி: மும்பை அணி போராட்டம் வீண்
ADDED : ஏப் 08, 2025 12:00 AM

மும்பை: பரபரப்பான பிரிமியர் லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய பெங்களூரு அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மாவின் போராட்டம் வீணானது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
கோலி அபாரம்: பெங்களூரு அணிக்கு பில் சால்ட் (4) ஏமாற்றினார். விக்னேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கோலி, 29 பந்தில் அரைசதம் கடந்தார். தேவ்தத் படிக்கல் (37) ஓரளவு கைகொடுத்தார். பாண்ட்யா 'வேகத்தில்' கோலி (67), லிவிங்ஸ்டன் (0) வெளியேறினர். சான்ட்னர் ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் ரஜத் படிதர், பாண்ட்யா பந்தை சிக்சருக்கு அனுப்பி, 25 பந்தில் அரைசதம் எட்டினார். பவுல்ட் வீசிய 19வது ஓவரில் ஜிதேஷ் சர்மா 2 சிக்சர் பறக்கவிட்டார். பவுல்ட் 'வேகத்தில்' படிதர் (64) வெளியேறினார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்தது. ஜிதேஷ் (40), டிம் டேவிட் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
பலே பாண்ட்யா: சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா (17), ரிக்கிள்டன் (17) சுமாரான துவக்கம் கொடுத்தனர். வில் ஜாக்ஸ் (22), சூர்யகுமார் யாதவ் (28) ஓரளவு கைகொடுத்தனர். பின் இணைந்த திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி நம்பிக்கை தந்தது. சுயாஷ் சர்மா வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 17 ரன் விளாசினார் திலக். ஹேசல்வுட் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த ஹர்திக் பாண்ட்யா, தனது அண்ணன் குர்ணால் பாண்ட்யா பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார். ஏழு பந்தில் 32 ரன் (4 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்திருந்த பாண்ட்யாவின் 'ஸ்டிரைக் ரேட்' 457.14 ஆக இருந்தது. பொறுப்பாக ஆடிய திலக், 26 பந்தில் அரைசதம் எட்டினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த போது புவனேஷ்வர் குமார் 'வேகத்தில்' திலக் (56 ரன், 4 சிக்சர், 4 பவுண்டரி) வெளியேறினார்.
குர்ணால் கலக்கல்: அதிரடியாக ஆடிய பாண்ட்யா (42 ரன், 4 சிக்சர், 3 பவுண்டரி), ஹேசல்வுட் பந்தில் அவுட்டாக, மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. குர்ணால் பந்துவீசினார். முதலிரண்டு பந்தில் சான்ட்னர் (8), தீபக் சகார் (0) அவுட்டாகினர். நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நமன் திர் (11), அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
மும்பை அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து தோல்வியடைந்தது. பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
13,000 ரன்
பெங்களூருவின் கோலி, தனது 17வது ரன்னை எட்டிய போது, 'டி-20' அரங்கில் 13,000 ரன் எடுத்த முதல் இந்தியர், 5வது சர்வதேச வீரரானார். இதுவரை 403 போட்டியில், 9 சதம், 99 அரைசதம் உட்பட 13,050 ரன் எடுத்துள்ளார்.
முதல் நான்கு இடங்களில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (14,562 ரன், 463 போட்டி), இங்கிலாந்தின் ஹேல்ஸ் (13,610 ரன், 494 போட்டி), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (13,557 ரன், 555 போட்டி), வெஸ்ட் இண்டீசின் போலார்டு (13,537 ரன், 695 போட்டி) உள்ளனர்.
* குறைந்த இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டிய 2வது வீரரானார் கோலி (386 இன்னிங்ஸ்). முதலிடத்தில் கெய்ல் (381) உள்ளார்.* இந்தியாவுக்காக 125 போட்டியில் (4188 ரன், ஒரு சதம், 8 அரைசதம்) பங்கேற்ற கோலி, உள்ளூர் போட்டியில் டில்லி அணி சார்பில் 7 போட்டியில் (270 ரன், 2 அரைசதம்) களமிறங்கினார். பெங்களூருவுக்காக பிரிமியர் லீக் தொடரில் 256 போட்டியில் (8119 ரன், 8 சதம், 57 அரைசதம்) விளையாடிய கோலி, சாம்பியன்ஸ் லீக் அரங்கில் 15 போட்டியில் (424 ரன், 2 அரைசதம்) களமிறங்கினார்.
184 விக்கெட்
மும்பையின் திலக் வர்மாவை அவுட்டாக்கிய பெங்களூருவின் புவனேஷ்வர் குமார், பிரிமியர் லீக் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த வேகப்பந்துவீச்சாளரானார். இதுவரை 179 போட்டியில், 184 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அடுத்த மூன்று இடங்களில் டுவைன் பிராவோ (183 விக்கெட், 161 போட்டி), மலிங்கா (170 விக்கெட், 122 போட்டி), பும்ரா (165 விக்கெட், 134 போட்டி) உள்ளனர்.
சகோதரர்கள் மோதல்
இந்திய சகோதரர்களான ஹர்திக் பாண்ட்யா (மும்பை), குர்ணால் பாண்ட்யா (பெங்களூரு) எதிர் எதிர் அணியில் விளையாடினர். அண்ணன் குர்ணால் பந்தில், தம்பி ஹர்திக் 2 சிக்சர் பறக்கவிட்டார்.இதற்கு முன் இருவரும் மும்பை அணிக்காக இணைந்து பங்கேற்றனர்.