ADDED : பிப் 27, 2024 11:13 PM

பெங்களூரு: டபிள்யு.பி.எல்., தொடர் லீக் போட்டியில் பெங்களூரு அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான டபிள்யு.பி.எல்., தொடரின் இரண்டாவது சீசன் நடக்கிறது. மொத்தம் 5 அணிகள் மோதுகின்றன. முதற்கட்ட போட்டிகள் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பீல்டிங் தேர்வு செய்தார்.
ரேணுகா நம்பிக்கை
குஜராத் அணிக்கு ஹர்லீன் தியோல், கேப்டன் பெத் மூனே ஜோடி சுமார் துவக்கம் தந்தது. போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய ரேணுகா தேவி, பெத் மூனேவை (8) போல்டாக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்து வந்த லிட்ச்பீல்டையும் (5) வெளியேற்றினார். வேதா 9 ரன்னில் திரும்பினார். ஆஷ்லே 7 ரன் எடுத்தார்.
கேத்ரினும் (3) ஒற்றை இலக்க ரன் எடுத்து வெளியேறினார். ஹேமலதா மட்டும் சற்று ஆறுதல் தந்தார். குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 107 ரன் மட்டும் எடுத்தது. பெங்களூரு சார்பில் சோபி 3, ரேணுகா 2 விக்கெட் வீழ்த்தினர்.
மந்தனா அபாரம்
எளிய இலக்கைத் துரத்திய பெங்களூரு அணிக்கு ஸ்மிருதி மந்தனா, சோபி (6) ஜோடி துவக்கம் தந்தது. பவுண்டரி மழை பொழிந்த மந்தனா 43 ரன் எடுத்தார். பெங்களூரு அணி 12.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்து வெற்றி பெற்றது. எல்லிஸ் பெர்ரி (23), மேஹனா (36) அவுட்டாகாமல் இருந்தனர்.
