/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
புவனேஷ்வருக்கு ரூ. 10.75 கோடி: பெங்களூரு அணி வாங்கியது
/
புவனேஷ்வருக்கு ரூ. 10.75 கோடி: பெங்களூரு அணி வாங்கியது
புவனேஷ்வருக்கு ரூ. 10.75 கோடி: பெங்களூரு அணி வாங்கியது
புவனேஷ்வருக்கு ரூ. 10.75 கோடி: பெங்களூரு அணி வாங்கியது
ADDED : நவ 25, 2024 11:06 PM

ஜெட்டா: ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் புவனேஷ்வர் குமாரை ரூ. 10.75 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது. தீபக் சகாரை, ரூ. 9.25 கோடிக்கு மும்பை அணி ஒப்பந்தம் செய்தது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 18வது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் 14ல் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாள் நடந்தது. முதல் நாள் ஏலத்தில் இந்தியாவின் ரிஷாப் பன்ட் (ரூ. 27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் (ரூ. 26.75 கோடி), வருண் சக்கரவர்த்தி (ரூ. 23.75 கோடி, கோல்கட்டா) அதிக விலைக்கு ஒப்பந்தமாகினர்.
இரண்டாம் நாள் ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ராவ்மன் பாவெல், ரூ. 1.50 கோடிக்கு கோல்கட்டா அணியில் ஒப்பந்தமானார். முன்னாள் பெங்களூரு கேப்டன் டுபிளசியை, ரூ. 2 கோடிக்கு டில்லி அணி வாங்கியது.
தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர், ரூ. 3.20 கோடிக்கு குஜராத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்செனை, ரூ. 7 கோடிக்கு பஞ்சாப் அணி தட்டிச் சென்றது.
புவனேஷ்வருக்கு மவுசு: இந்தியாவின் குர்னால் பாண்ட்யா (ரூ. 5.75 கோடி, பெங்களூரு), நிதிஷ் ராணா (ரூ. 4.20 கோடி, ராஜஸ்தான்), துஷார் தேஷ்பாண்டே (ரூ. 6.50 கோடி, ராஜஸ்தான்) பல்வேறு அணிகளில் ஒப்பந்தமாகினர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவேஷ்வர் குமாரை பெங்களூரு அணி ரூ. 10.75 கோடிக்கு வாங்கியது. நேற்று அதிகவிலைக்கு ஒப்பந்தமான வீரரானார் புவனேஷ்வர்.
மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாரை, ரூ. 8 கோடிக்கு 'ரைட் டூ மேட்ச்' கார்டு பயன்படுத்தி டில்லி அணி தக்கவைத்துக் கொண்டது. இந்தியாவின் தீபக் சகாரை, மும்பை அணி ரூ. 9.25 கோடிக்கு வாங்கியது. லக்னோ அணி ஆகாஷ் தீப்பை ரூ. 8 கோடிக்கு வாங்கியது.
விலை போகாத வீரர்கள்
நேற்றைய 2ம் நாள் ஏலத்தில் இந்தியாவின் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், சர்பராஸ் கான், உமேஷ் யாதவ், பரத், நவ்தீப் சைனி, ஷிவம் மாவி, நியூசிலாந்தின் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, இங்கிலாந்தின் அடில் ரஷித், பென் டக்கெட், அட்கின்சன், இலங்கையின் பதும் நிசங்கா, தில்ஷன் மதுஷங்கா, தென் ஆப்ரிக்காவின் கேஷவ் மஹாராஜ், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப், பிரண்டன் கிங், ராஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜா, ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் ஆகியோரை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை.
படிக்கல், ரகானே ஒப்பந்தம்
விலை போகாத வீரர்களில் சிலரை தேர்வு செய்து மீண்டும் ஏலம் நடத்தப்பட்டது. இதில் இந்திய வீரர் தேவ்தத் படிக்கல், அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு பெங்களூரு அணியில் ஒப்பந்தமானார். இந்தியாவின் ரகானே (ரூ. 1.50 கோடி, கோல்கட்டா), லுவ்னித் சிசோடியா (ரூ. 30 லட்சம், கோல்கட்டா), ஸ்ரேயாஸ் கோபால் (ரூ. 30 லட்சம், சென்னை), ஸ்வஸ்திக் சிகாரா (ரூ. 30 லட்சம், பெங்களூரு), அனுகுல் ராய் (ரூ. 40 லட்சம், கோல்கட்டா), வான்ஷ் பேடி (ரூ. 55 லட்சம், சென்னை), ஆன்ட்ரி சித்தார்த் (ரூ. 30 லட்சம், சென்னை), அர்ஜுன் (ரூ. 30 லட்சம், மும்பை), இங்கிலாந்தின் மொயீன் அலி (ரூ. 2 கோடி, கோல்கட்டா), நியூசிலாந்தின் பிலிப்ஸ் (ரூ. 2 கோடி, குஜராத்), தென் ஆப்ரிக்காவின் டோனோவன் பெரேரா (ரூ. 75 லட்சம், டில்லி) பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவின் வார்னர், இந்தியாவின் ஷர்துல் தாகூர், பியுஸ் சாவ்லா, அன்மோல்பிரீத் சிங், மயங்க் அகர்வால், ஹார்விக் தேசாய் ஆகியோர் மீண்டும் விலை போகவில்லை.
இளம் வீரர் வைபவ்
நேற்றைய ஏலத்தில் இளம் வைபவ் சூர்யவன்ஷி (13 ஆண்டு, 243 நாட்கள்), இடம் பெற்றிருந்தார். அடிப்படை ஏலத்தொகையான ரூ. 30 லட்சத்திற்கு இவரை ஒப்பந்தம் செய்ய டில்லி, ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்டன. முடிவில் ராஜஸ்தான் அணி ரூ. 1.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஐ.பி.எல்., ஏல வரலாற்றில் வாங்கப்பட்ட இளம் வீரரானார்.
பீகாரை சேர்ந்த இடதுகை பேட்டரான வைபவ், இதுவரை 5 முதல் தரம் (100 ரன்), ஒரு 'டி-20' (13 ரன்) போட்டியில் பங்கேற்றுள்ளார். தவிர இவர், சென்னையில் நடந்த யூத் டெஸ்டில் (19 வயது) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் (104 ரன், 62 பந்து) விளாசினார்.