/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பவுலர்கள் சாகசம்...இந்தியா பரவசம்: நான்காவது போட்டியில் வெற்றி
/
பவுலர்கள் சாகசம்...இந்தியா பரவசம்: நான்காவது போட்டியில் வெற்றி
பவுலர்கள் சாகசம்...இந்தியா பரவசம்: நான்காவது போட்டியில் வெற்றி
பவுலர்கள் சாகசம்...இந்தியா பரவசம்: நான்காவது போட்டியில் வெற்றி
ADDED : நவ 06, 2025 10:55 PM

கோல்டு கோஸ்ட்: நான்காவது 'டி-20' போட்டியில் பவுலர்கள் அசத்த, இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. நான்காவது போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
'பேட்டிங்' வரிசை மாற்றம்: இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில் மந்தமான துவக்கம் தந்தனர். 5 ஓவரில் 38/0 ரன் தான் எடுக்கப்பட்டன. ஜாம்பா ஓவரில் (7வது) ஒரு சிக்சர் அடித்தார் அபிஷேக். மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, 28 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். 'பேட்டிங்' ஆர்டரில் மாற்றம் செய்யப்பட, 3வது வீரராக ஷிவம் துபே வந்தார். ஜாம்பா பந்தில் இமாலய சிக்சர் அடித்த துபே, 22 ரன்னில் வெளியேறினார். ஜாம்பா 'சுழலில்' கேப்டன் சூர்யகுமார் அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்தார். சுப்மன், 46 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார், 20 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 15.1 ஓவரில் 125/4 ரன் எடுத்து தவித்தது. ஜாம்பா (17வது) 'சுழலில்' திலக் வர்மா (5), ஜிதேஷ் சர்மா (3) சிக்கினர்.
வாஷிங்டன் சுந்தர், 12 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் அக்சர் படேல் கைகொடுத்தார். ஸ்டாய்னிஸ் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். இந்திய அணி 20 ஓவரில் 167/8 ரன் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 42 ரன் எடுத்தது. அக்சர் (21), வருண் சக்ரவர்த்தி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
வாஷிங்டன் கலக்கல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ், மாத்யூ ஷார்ட் நல்ல துவக்கம் தந்தனர். அக்சர் படேல் பந்தில் ஷார்ட் (25) எல்.பி.டபிள்யு., ஆனார். 8.3 ஓவரில் 67/1 என வலுவாக இருந்தது. இதற்கு பின் இந்திய பவுலர்கள் சாகசம் நிகழ்த்தினர். அக்சர் பந்தில் இங்லிஸ் (12) போல்டானார். துபே பந்துவீச்சில் மார்ஷ் (30), டிம் டேவிட் (14) அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. வருண் சக்ரவர்த்தி 'சுழலில்' மேக்ஸ்வெல் (2) போல்டாக, இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. 15 ஓவரில் 103/6 ரன் எடுத்து தத்தளித்தது. தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் (17வது) ஸ்டாய்னிஸ் (17), பார்ட்லட் (0) வரிசையாக அவுட்டாகினர். அடுத்து வந்த எல்லிஸ் தடுத்து ஆட, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.
ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவரில் 119 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. எளிதாக வென்ற இந்தியா, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
ஆட்டநாயகன் விருதை அக்சர் படேல் (21 ரன், 2 விக்.,) வென்றார். ஐந்தாவது போட்டி நவ.8ல் பிரிஸ்பேனில் நடக்க உள்ளது. இதில் இந்திய அணி வென்றால், தொடரை கைப்பற்றலாம்.
குறைவு...நிறைவு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைவான இலக்கை நிர்ணயித்து வென்ற அணிகள் பட்டியலில் இந்தியா(168) 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் இந்தியா தான் (162, கான்பெரா, 2022) உள்ளது. 3வது இடத்தில் இங்கிலாந்து (179, கான்பெரா, 2022) உள்ளது.
* ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில், 'டி-20' போட்டியில் தனது 2வது குறைந்த ஸ்கோரை (119) நேற்று பதிவு செய்தது. முதலிடத்தில் 111 ரன் (எதிர், நியூசி., 2022, சிட்னி) உள்ளது.
* ஆஸ்திரேலிய மண்ணில் இரு தரப்பு 'டி-20' தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. கடந்த 4 தொடரில் 2ல் வென்றது. 2 'டிரா' ஆனது. தற்போது 2-1 என முன்னிலை வகிக்கிறது.
பும்ரா 99 விக்.,
ஆஸ்திரேலியாவின் டிவார்ஷியசை (5) போல்டாக்கிய பும்ரா, சர்வதேச 'டி-20'ல் தனது 99வது விக்கெட்டை (79 போட்டி) பெற்றார். இந்தியா சார்பில் 'டி-20' அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் அர்ஷ்தீப் சிங் (67 போட்டி, 105 விக்கெட்) உள்ளார்.

