/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
உங்கள் பள்ளிகளுக்கு செல்லுங்கள்... * உலக சாம்பியன்களுக்கு பிரதமர் மோடி 'அட்வைஸ்'
/
உங்கள் பள்ளிகளுக்கு செல்லுங்கள்... * உலக சாம்பியன்களுக்கு பிரதமர் மோடி 'அட்வைஸ்'
உங்கள் பள்ளிகளுக்கு செல்லுங்கள்... * உலக சாம்பியன்களுக்கு பிரதமர் மோடி 'அட்வைஸ்'
உங்கள் பள்ளிகளுக்கு செல்லுங்கள்... * உலக சாம்பியன்களுக்கு பிரதமர் மோடி 'அட்வைஸ்'
ADDED : நவ 06, 2025 10:59 PM

புதுடில்லி: ''நீங்கள் படித்த பள்ளிகளுக்கு செல்லுங்கள். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு ஊக்கம் அளியுங்கள்,'' என உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி ஆலோசனை தெரிவித்தார்.
பெண்களுக்கான உலக கோப்பையை (50 ஓவர்) ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.
இதையடுத்து இந்திய அணி வீராங்கனைகள், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முடிவில், தனது கையால் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, பாராட்டினார் மோடி.
அப்போது மோடி பேசியது: இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படுவது இல்லை. இது, மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. போட்டிகளில் இந்தியா வென்றால் கொண்டாடுகின்றனர். ஒருவேளை ஏதாவது தவறாக நடந்தால், ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறது. பைனலில் அமன்ஜோத் கவுர் 'கேட்ச்' சிறப்பானதாக இருந்தது. 2024 'டி-20' உலக கோப்பை தொடரில் சூர்யகுமார், கடைசி நேரத்தில் பிடித்த 'கேட்ச்' போல இருந்தது.
அடுத்த சில நாட்களுக்குப் பின், நீங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள். அந்த குழந்தைகளும் உங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பர். ஒரு ஆண்டில் குறைந்தது 3 பள்ளிகளை தேர்வு செய்து, வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அங்கு செல்லுங்கள். இது உங்களுக்கும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் ஊக்கமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜனாதிபதி பாராட்டு
உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணியினர் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, வீராங்கனைகள் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில்,'பல்வேறு பகுதிகள், வித்தியாசமான சமூக பின்னணி, சூழல்களில் இருந்து வந்து, இந்தியா என ஒரு அணியாக விளையாடி சாதித்துள்ளீர்கள். இது இளம் தலைமுறையினர், பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமைந்துள்ளது,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகின் ரகசியம்
பிரதமர் மோடியிடம் இந்திய வீராங்கனை ஹர்லீன், 'உங்கள் முகம் எப்போதும் பளபளப்பாக உள்ளது. இதை எப்படி பராமரிக்கிறீர்கள்,' என கேட்டார். அதற்கு மோடி,'' இதில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. 25 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தில் உள்ளேன். ஏராளமான வாழ்த்துகள் கிடைக்கின்றன. இதனால் தான் பொலிவுடன் உள்ளது,'' என்றார்.

