தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'உலகை' ஆளப்போறார் பும்ரா: கணிக்கிறார் பிலாண்டர்

'உலகை' ஆளப்போறார் பும்ரா: கணிக்கிறார் பிலாண்டர்

'உலகை' ஆளப்போறார் பும்ரா: கணிக்கிறார் பிலாண்டர்


ADDED : பிப் 08, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜோகனஸ்பர்க்: ''வரும் 'டி-20' உலக கோப்பை தொடரின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக பும்ரா ஜொலிப்பார்,''என வெர்னான் பிலாண்டர் தெரிவித்தார்.

முதுகுப் பகுதி காயத்தில் இருந்து மீண்ட பும்...பும் பும்ரா மிரட்டுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரில் விக்கெட் மழை பொழிகிறார். முதல் இரண்டு டெஸ்டில் 58 ஓவர் வீசி, 15 விக்கெட் கைப்பற்றினார். இதில் விசாகப்பட்டனத்ததில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 9 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு வித்திட்டார். இதையடுத்து டெஸ்ட் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பெற்ற முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாறு படைத்தார்.

பும்ரா குறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் 'வேகப்புயல்' வெர்னான் பிலாண்டர் கூறியது: துல்லியமான அளவில் பந்துவீசுவதால் தான் டெஸ்டில் அசத்துகிறார் பும்ரா. அனைத்து திறமையும் பெற்ற முழுமையான பவுலராக திகழ்கிறார். ஆரம்ப காலத்தில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். தற்போது கட்டுக்கோப்பாக பந்துவீசும் வித்தையை கற்றுக் கொண்டுள்ளார். புதிய பந்தில் நன்கு 'ஸ்விங்' செய்கிறார். தரமான 'ரிவர்ஸ் ஸ்விங்', குறி தப்பாத 'யார்க்கர்' வகை பந்துகளை வீசுகிறார். இத்தகைய திறன் தான் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காகவில் வரும் ஜூனில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கு தேவைப்படும். இத்தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகிப்பார். 'உலக' தொடரின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக பிரகாசிப்பார் என நம்புகிறேன்.

சிறந்த தலைமை



முகமது ஷமியும் முத்திரை பதிக்கிறார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் சாதித்தார். 'சுழலுக்கு' சாதகமான இந்திய ஆடுகளங்களில் இருந்து மாறுபட்ட தென் ஆப்ரிக்க மண்ணில் சாதிப்பது கடினம். இருப்பினும் இங்கு ஒவ்வொரு முறை வரும் போதும் இந்திய அணியின் ஆட்டத்தில் முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது. இந்தியாவில் 'ஸ்பின்னர்கள்' வெற்றி தேடித் தருவது வழக்கம். இந்த நிலையில் 2018-19ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது பாராட்டுக்குரியது. இதற்கு தரமான பவுலர்கள், கோலியின் தலைமை முக்கிய காரணம். கோலி சிறந்த கேப்டனாக அப்போது பிரகாசித்தார். தனது பவுலர்களை சிறப்பான முறையில் பயன்படுத்தினார்.

பயிற்சியாளர் வாய்ப்பு



ஐ.பி.எல்., முடிந்ததும் 'டி-20' உலக கோப்பை நடப்பது பவுலர்களுக்கு சோர்வை தரலாம். 'உலக' தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து வேகப்பந்துவீச்சாளர்களின் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.பி.எல்., தொடரில் பயிற்சியாளர், ஆலோசகராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கான வாய்ப்பு கிடைத்தால், எனது அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

இவ்வாறு வெர்னான் பிலாண்டர் கூறினார்.

'ரெஸ்ட்' கொடுக்கலாமா

இந்தியா, இங்கிலாந்து மோதும் மூன்றாவது டெஸ்ட் வரும் 15ல் ராஜ்கோட்டில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில் பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்படலாம். முகேஷ் குமார் நீக்கப்பட்டு சிராஜ் இடம் பெறலாம். காயத்தில் இருந்து மீண்ட ராகுல் வரவால், ரஜத் படிதார் இடம் பெறுவது சந்தேகம். காயத்தில் இருந்து தேறி வரும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு குறைவு. அணி தேர்வு பற்றி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட், தேர்வுக் குழு தலைவர் அகார்கர் விவாதித்து வருகின்றனர். ராஜ்கோட் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், துணைக் கேப்டன் பும்ரா அணியில் நீடிக்கவும் வாய்ப்பு உண்டு.



வருவாரா கோலி...

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்டில், தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி பங்கேற்க வாய்ப்பு இல்லை. கோலி- அனுஷ்கா தம்பதிக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. இதனால் கோலி ஓய்வில் இருப்பதாக தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்திருந்தார். இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில்,''குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். இருப்பினும் கோலி இடம் பெறாதது இந்திய அணிக்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட்டுக்கு இழப்பு. ஆண்டர்சன்-கோலி இடையிலான 'விறுவிறு' மோதலை ரசிகர்கள் காண முடியாது,''என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us