/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கேப்டன் ஸ்டோக்ஸ் போர்க்கொடி: 'அம்பயர்ஸ் கால்' முறைக்கு
/
கேப்டன் ஸ்டோக்ஸ் போர்க்கொடி: 'அம்பயர்ஸ் கால்' முறைக்கு
கேப்டன் ஸ்டோக்ஸ் போர்க்கொடி: 'அம்பயர்ஸ் கால்' முறைக்கு
கேப்டன் ஸ்டோக்ஸ் போர்க்கொடி: 'அம்பயர்ஸ் கால்' முறைக்கு
ADDED : பிப் 19, 2024 10:59 PM

ராஜ்கோட்: 'அம்பயர்ஸ் கால்' முறை நீக்கப்பட வேண்டுமென இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தினார்.
அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்(டி.ஆர்.எஸ்.,) போது, எல்.பி.டபிள்யு.,க்கு மட்டும் 'அம்பயர்ஸ் கால்' முறையில் முடிவு அறிவிக்கப்படும். பந்து 'பிட்ச்' ஆன இடம், பந்து செல்லும் திசை, 'ஸ்டம்ப்சை' தாக்கும் உயரம் போன்றவை 'பால்-டிராக்கிங்' தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்யப்படும்.
பந்தின் அளவில் 50 சதவீதத்துக்கும் குறைவாக 'ஸ்டம்சை' தகர்த்தால் 'அம்பயர்ஸ் கால்' என அறிவிக்கப்படும். அப்போது கள அம்பயர் கொடுத்த 'அவுட்' அல்லது 'நாட் அவுட்' முடிவு மாறாது.
இந்த முடிவுகள் பல முறை சர்ச்சையை கிளப்ப, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சச்சின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது ஸ்டோக்சும் சேர்ந்துள்ளார். ராஜ்கோட் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா பந்தில் கிராலேவுக்கு(11) எல்.பி.டபிள்யு., கொடுக்கப்பட்டது. கள அம்பயர் தர்மசேனாவின் இம்முடிவை எதிர்த்து 'ரிவியு' கேட்டார். 'ரீப்ளே'வில் பந்து லெக் ஸ்டம்ப்சை லேசாக உரசிச் செல்ல வாய்ப்பு இருப்பது போல தெரிந்தது. 'அம்பயர்ஸ் கால்' முறையில் 'அவுட்' உறுதி செய்யப்பட்டது.
இதே போல விசாகப்பட்டனம் டெஸ்டிலும் குல்தீப் பந்தில் 'ரிவியு' முறையில் கிராலே எல்.பி.டபிள்யு., ஆனார். ராஜ்கோட் போட்டியின் முதல் இன்னிங்சில் சிராஜ் பந்தில் போப்பிற்கு கள அம்பயர் 'நாட் அவுட்' கொடுத்தார். பந்து, முழங்காலுக்கு மேலே சென்றதாக போப் நினைத்தார். இந்தியா 'ரிவியு' கேட்டது. 'ரீப்ளே'வில் பந்து, லெக் ஸ்டம்ப்பின் மேல் பகுதியை தகர்ப்பது போல தெரிய வர, எல்.பி.டபிள்யு., உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து ஸ்டோக்ஸ் கூறுகையில், ''டெஸ்ட் தொடரில் மூன்று முறை 'அம்பயர்ஸ் கால்' அவுட் முறையால் பாதிக்கப்பட்டோம். ராஜ்கோட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் கிராலேவுக்கு எப்படி அவுட் கொடுத்தனர் என தெரியவில்லை. 'ரீப்ளே'வில் பந்து, 'ஸ்டம்ப்சை' தகர்க்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.போட்டிக்கு பின் 'மேட்ச் ரெப்ரி' ஜெப் குரோவிடம் பேசினேன். அவர் அளித்த விளக்கம் புரியவில்லை. என்னை பொறுத்தவரை சர்ச்சைக்குரிய 'அம்பயர்ஸ் கால்' முறை நீக்கப்பட வேண்டும்,''என்றார்.

