'காஸ்ட்லி' வீரர் அஷ்வந்த்: டி.என்.பி.எல்., ஏலத்தில்
'காஸ்ட்லி' வீரர் அஷ்வந்த்: டி.என்.பி.எல்., ஏலத்தில்
ADDED : ஜூலை 03, 2026 11:42 PM

சென்னை: டி.என்.பி.எல்., ஏலத்தில் அஷ்வந்த், அதிகபட்சமாக ரூ. 14.45 லட்சத்திற்கு சேப்பாக்கம் அணியால் வாங்கப்பட்டார்.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல்., 'டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 10-வது சீசன் வரும் ஆக. 4-28ல் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதற் கட்ட போட்டிகள் ஆக. 4-15ல் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கும்.
இரண்டாவது கட்டப் போட்டிகள் ஆக. 18-28ல் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு கோவை அணிக்காக விளையாடிய சாய் சுதர்ஷன், திருப்பூர் அணியின் சாய் கிஷோர், திருச்சி அணியின் வாஷிங்டன் சுந்தர், வரும் சீசனிலும் அதே அணியில் தொடர்கின்றனர்.
வீரர்கள் ஏலம் சென்னை எம்.சி., கிரிக்கெட் அரங்கில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 783 வீரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் அதிக பட்சமாக ரூ. 14.45 லட்சத்துக்கு அஷ்வந்த் வல்தப்பாவை, சேப்பாக்கம் அணி வாங்கியது. அடுத்து ரூ. 13.7 லட்சம் கொடுத்து, நெல்லை அணி முகிலேஷை ஒப்பந்தம் செய்தது. சித்தார்த் மகாதேவன் ரூ. 8.7 லட்சத்துக்கு, மதுரை அணிக்கு சென்றார்.
கடந்த ஆண்டு திண்டுக்கல் அணிக்கு விளையாடிய அஷ்வின், சேப்பாக்கம் அணியின் பாபா அபராஜித், விஜய் சங்கர், வரும் சீசனில் பங்கேற்கவில்லை, என அந்த அணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
