/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா நீக்கம்
/
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா நீக்கம்
ADDED : பிப் 12, 2025 10:33 PM

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக பும்ரா நீக்கப்பட்டார். ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி தேர்வாகினர்.
பாகிஸ்தான், துபாயில், வரும் பிப். 19-மார்ச் 9ல் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கவுள்ளது. இந்திய அணி, 'ஏ' பிரிவில் வங்கதேசம் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது.
இந்திய உத்தேச அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியின் போது இவரது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வர தேவையான மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது இவருக்கு 'ஸ்கேன்' எடுக்கப்பட்டது. பந்துவீசும் அளவுக்கு போதிய உடற்தகுதி இல்லாத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி பிரதான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஹர்ஷித் தேர்வு: பும்ராவுக்கு பதில், அனுபவ வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் (44 போட்டி, 71 விக்கெட்) தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து 'டி-20' (3 விக்கெட், ஒரு போட்டி), ஒருநாள் (6 விக்கெட், 3 போட்டி ) தொடரில் 'வேகத்தில்' அசத்திய இளம் வீரர் ஹர்ஷித் ராணா 23, தேர்வானார்.
இதேபோல உத்தேச அணியில் இடம் பிடித்திருந்த துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டார். ஏற்கனவே இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், சுப்மன் கில் ஜோடி துவக்கம் தருகிறது. தவிர இந்திய அணிக்கு 5வது சுழற்பந்துவீச்சாளர் தேவைப்படுவதால் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு, சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' வருண் சக்ரவர்த்தி தேர்வானார்.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.