ADDED : அக் 24, 2026 06:48 AM

கிறைஸ்ட்சர்ச்: இரண்டாவது ‘டி–20’ போட்டியில் இளம் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று (அக். 24) கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடக்க உள்ளது.
இஷான் கிஷான் காயம்: இந்திய அணியின் ‘டாப்–ஆர்டர்’ வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா சேர்ந்து 94 ரன் விளாசினர். காயம் காரணமாக இஷான் கிஷான் (இடுப்பு பகுதி தசை பிடிப்பு) இன்று பங்கேற்க மாட்டார். இவருக்கு பதில் விக்கெட்கீப்பர்–பேட்டர் குமார் குஷாக்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இஷான் இடம் பெறாததால், 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. துவக்கத்தில் அபிஷேக்–வைபவ் களமிறங்கலாம். 3வது இடத்தில் சாம்சன் வரலாம். இவர்களை கட்டுப்படுத்த, ‘பவர் பிளே’ ஓவரில் ‘ஆப்–ஸ்பின்னர்’ பிரேஸ்வெல் அல்லது கிளன் பிலிப்சை நியூசிலாந்து பயன்படுத்தலாம். முதல் போட்டியில் 3வது வீரராக வந்த திலக் வர்மா, இம்முறை 5வது இடத்தில் களம் காணலாம். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி இருப்பதால், ‘மெகா’ ஸ்கோரை எளிதில் எட்டலாம்.
தடுமாறும் பந்துவீச்சு
பவுலிங் தான் பிரச்னையாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பந்துவீசிய அனுபவ புவனேஷ்வர் குமார், முதல் போட்டியில் தடுமாறினார். 4 ஓவரில் 49 ரன் விட்டுக் கொடுத்தார். அர்ஷ்தீப் சிங் ‘வேகமும்’ எடுபடவில்லை. ‘ஸ்பின்னர்’ அக்சர் படேல், 51 ரன்னை வாரி வழங்கினார். ஹர்திக் பாண்ட்யா போன்ற ‘ஆல்–ரவுண்டர்’ இல்லாததால், தரமான 5வது அல்லது 6வது பவுலரை கண்டறிய முடியவில்லை. கடந்த போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி, 4 ஓவரில் 40 ரன் கொடுத்தார். நமன் திர் பந்துவீசவே இல்லை. இன்று இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினால், தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.
கிளன் பிலிப்ஸ் பலம்
நியூசிலாந்து அணிக்கு செய்பர்ட், ஆலன், டேரில் மிட்சல், கடந்த போட்டியில் 82 ரன் விளாசிய கிளன் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ் என வலுவான பேட்டர்கள் உள்ளனர். ‘வேகப்புயல்’ மாட் ஹென்றி, ஆடம் மில்னே துல்லியமாக பந்துவீச தவறுவது பலவீனம். ‘சுழலில்’ கேப்டன் சான்ட்னர், பிரேஸ்வெல் அசத்துவது பலம்.
