/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோல்கட்டா பயிற்சியாளர் மீது புகார்
/
கோல்கட்டா பயிற்சியாளர் மீது புகார்
ADDED : மார் 29, 2024 12:30 AM

புதுடில்லி: ''கோல்கட்டா அணி பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ரொம்ப 'ஸ்டிரிக்ட்'. இவரது அணுகுமுறையால் வெளிநாட்டு வீரர்கள் விரக்தி அடைந்தனர்,'' என டேவிட் வெய்சா தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட்கீப்பர்/பேட்டர் சந்திரகாந்த் பண்டிட், 62. இவரது பயிற்சியில் விதர்பா(2018,19), ம.பி., (2022) அணிகள் ரஞ்சி கோப்பை வென்றன. ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியின் தலைமை பயிற்சியாளராக 2022ல் நியமிக்கப்பட்டார்.
இவரது செயல்பாடு குறித்து கோல்கட்டா அணிக்காக 2023ல் விளையாடிய நமீபிய 'ஆல்-ரவுண்டர்' டேவிட் வெய்சா கூறுகையில்,''போராளி குழுக்களின் பயிற்சியாளர் போல சந்திரகாந்த் பண்டிட் நடந்து கொள்வார். இவர் கண்டிப்பானவர் என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். இதே போன்று வெளிநாட்டு வீரர்களிடமும் 'ஸ்டிரிக்ட்' ஆக இருந்தது சரியல்ல. உலகின் பல்வேறு லீக் தொடர்களில் பங்கேற்றவர்களிடம் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும், இந்த உடை தான் அணிய வேண்டும் என கூறுவது தேவையில்லாதது.
முன்பு பயிற்சியாளராக இருந்த பிரண்டன் மெக்கலத்தின் அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். இவரது செயல்பாடுகள் அணியில் பதட்டத்தை ஏற்படுத்தின. ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வீரர்கள் விரக்தி அடைந்தனர்,'' என்றார்.
சாப்பிடும் 'கேக்' முகத்தில் எதற்கு...
டேவிட் வெய்சா கூறுகையில்,''இந்தியாவில் பிறந்தநாள் என்றால் 'கேக்' வெட்டி கொண்டாடுகின்றனர். இதை எடுத்து சிலர் ஊட்டி விடுகின்றனர். திடீரென பிறந்நதாள் கொண்டாடுபவரின் முகம் முழுவதும் 'கேக்கை' பூசுகின்றனர். அழகான கேக்...அதை சாப்பிட முடியாமல் முகத்தில் பூசி வீணடிப்பது எரிச்சலை தரும். எனது பிறந்தநாளை கோல்கட்டா அணியினர் கொண்டாடினர். அப்போது 'முகத்தில் பூசவா...' என்றனர். தலைமுடியை தவிர்க்கும்படி கெஞ்சினேன். எனது காது பகுதியில் எல்லாாம் 'கேக்' மயம். முட்டாள்தனமான பாரம்பரிய கொண்டாட்டமாக தோன்றியது,'' என்றார்

